பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் 3 ஆண்கள் பணி நீக்கம்

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் 3 ஆண்கள் பணி நீக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஊழியர்கள் குழு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல கட்ட விசாரணைகளின் பின்னர் மூன்று ஆண் ஊழியர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

2021 மற்றும் 2022 காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக ஜூலை 30, 2023 மற்றும் ஓகஸ்ட் 2, 2023 அன்று வெளியான ஊடக செய்திகள் கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுத்த விசாரணைக்கு காரணமாக அமைந்தது.

ஓகஸ்ட் 2023 இல், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், நாடாளுமன்றத்தின் பராமரிப்பு பிரிவின் பெண்கள் என நாடாளுமன்ற மகளிர் மன்றத்தின் சார்பாக சுட்டிக்காட்டியிருந்தார்.

பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அன்றைய தினம் அவர் நாடாளுமன்றத்தில் பொதுச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் பரிந்துரையின் பேரில் குற்றவாளிகள் மூவரையும் பணி நீக்கம் செய்வதற்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன ஜனவரி 09ஆம் திகதி அனுமதி வழங்கியுள்ளார்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை விசாரிப்பதற்காக அப்போதைய சபாநாயகரின் ஆலோசனையின் பேரில் அப்போதைய நாடாளுமன்ற நிர்வாக பணிப்பாளர் தலைமையில் 04.08.2023 அன்று நாடாளுமன்றச் செயலாளரால் மூவரடங்கிய உள்ளக விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் விசாரணையின் போது இரண்டு நாடாளுமன்ற ஊழியர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதோடு, விசாரணைக் குழுவின் அறிக்கை 23.08.2023 அன்று நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு கையளிக்கப்பட்டது.

அதற்கமைவாக இது தொடர்பில் மேலதிக ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில், பொலிஸ் மா அதிபர் இந்த விசாரணையை சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான பிரிவுக்கு  ஒப்படைத்ததாகவும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொலிஸ் விசாரணைகளின் பிரகாரம், மற்றுமொரு நாடாளுமன்ற ஊழியர் கைது செய்யப்பட்டதோடு, 30.01.2024 அன்று, அந்த ஊழியரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.

இதற்கமைய, இது தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் முறையான விசாரணையை நடத்துமாறு குற்றஞ்சாட்டப்பட்ட ஊழியர்கள் கோரியதன் அடிப்படையில், சட்ட விதிகளுக்கு இணங்க முறையான ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன நியமிக்கப்பட்டார்.

இந்த ஒழுக்காற்று விசாரணையின் இறுதி அறிக்கை 12.23.2024 அன்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவிடம் கையளிக்கப்பட்டதுடன், அதன் அடிப்படையில் குறித்த மூன்று ஊழியர்களையும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட நாள் முதல் பணி நீக்கம் செய்யுமாறு சபாநாயகருக்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரையின் பிரகாரம் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் அமைப்புகள் முகாமைத்துவப் பிரிவில் உள்ள பெண்களுக்கு அதன் அதிகாரிகளால் அடிக்கடி பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக செய்திகள் வெளியாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனவரி 6, 2025 அன்று தெரிவித்தபோதிலும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை எவரும் அறிவிக்கவில்லை என சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன குறிப்பிட்டிருந்தார்.