டித்வா சூறாவளி சேதம்: UNFPA அவசர நிதி உதவியுடன் சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்

Surgical services have resumed at Chilaw District General Hospital following emergency repairs supported by UNFPA after severe flood damage caused by Cyclone Ditwah, ensuring critical maternal and life-saving healthcare services.

டித்வா சூறாவளி சேதம்: UNFPA அவசர நிதி உதவியுடன் சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சனத் தொகை நிதியம் (UNFPA) வழங்கிய அவசர நிதி ஆதரவின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர், சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அறுவைச் சிகிச்சை விடுதியின் முக்கிய பகுதிகள் விரைவாகச் சீரமைக்கப்பட்டதன் மூலம், கிருமி நீக்கம் (Sterilization) நடைமுறைகள் பாதுகாப்பாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதுடன், மாதந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கும், தாய்மார் மற்றும் நிறைகுறைந்த குழந்தைகளுக்கு அவசியமான உயிர்காக்கும் சிகிச்சை சேவைகளை தொடர முடிந்துள்ளது.

டித்வா சூறாவளிக்குப் பின்னர் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் இலங்கை முழுவதும் பல சுகாதார நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக, பல அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருத்துவ சேவைகள் தடைப்பட்டன. அந்த வகையில், ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கும், அதிகளவிலான கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நிறைகுறைந்த குழந்தைகளுக்கும் சேவையளிக்கும் முக்கிய பரிந்துரை வைத்தியசாலையான சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் அறுவைச் சிகிச்சை விடுதி கடுமையாக சேதமடைந்தது.

2025 டிசம்பர் மாதத்தில், சூறாவளிக்குப் பிந்தைய சேதங்களை மதிப்பிடுவதற்காக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் குழுவினர் வைத்தியசாலையை ஆய்வு செய்தபோது, வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுமித் அத்தநாயக்க தலைமையிலான நிர்வாகம், அறுவைச் சிகிச்சை விடுதியை உடனடியாக சீரமைப்பது அவசியம் என வலியுறுத்தியது. வெள்ள நீரால் சுவர்கள், பலகைகள், கதவுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்து, அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான கிருமியற்ற சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. உடனடி சீரமைப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால், முக்கியமான மகப்பேறு மற்றும் சிகிச்சைகள் உட்பட அறுவைச் சிகிச்சைகளை மீண்டும் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

“நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் எமது வைத்தியசாலை கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக பிரதான அறுவைச் சிகிச்சை விடுதித்தொகுதி மிக மோசமாக சேதமடைந்தது. அதனால் எந்தவித அறுவைச் சிகிச்சைகளையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் ( UNFPA ) குழுவினர் வந்து நிலைமையை நேரில் பார்வையிட்டனர். சுவர்கள் மற்றும் உள் பிரிவுகள் கடுமையாக சேதமடைந்திருந்தன. இது பாதுகாப்பான அறுவைச் சிகிச்சைகளை மீண்டும் ஆரம்பிப்பதை ஆபத்தாக்கியிருந்தது,” என வைத்தியர் அத்தநாயக்க தெரிவித்தார்.

இந்த அவசர வேண்டுகோளுக்கு உடனடியாக பதிலளித்த ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம், அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சுடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு, அறுவைச் சிகிச்சைச் தொகுதியை விரைவாக சீரமைக்கும் பணிகளை முன்னெடுத்தது. இதன் மூலம் கிருமி நீக்கம் நடைமுறைகள் மீண்டும் பாதுகாப்பாக ஆரம்பிக்கப்பட்டு, அறுவைச் சிகிச்சைகள் தொடர வழிவகை செய்யப்பட்டது.

2025 டிசம்பர் 30ஆம் திகதிக்குள் சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றன. இதன் கீழ், அறுவைச் சிகிச்சைத் தொகுதியின் சுவர்கள், பலகைகள் மாற்றப்பட்டதுடன், கதவுகள், பூட்டுகள்,  தரை அமைப்புகள் சீரமைக்கப்பட்டன. மேலும் பலகைகள் மற்றும் கண்ணாடிகளை பயன்படுத்தி உள் அறைகள் புதுப்பிக்கப்பட்டன. இவ்வாறு அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான கிருமியற்ற சூழல் மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

இந்த விரைவான சீரமைப்பு, வைத்தியசாலையின் நோயாளர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மிகவும் அவசியமானதாக இருந்தது. சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் மாதந்தோறும் சுமார் 500 கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளப்பெருக் கடுமையாக இருந்தபோதிலும், 150க்கும் மேற்பட்ட நோயாளிகள், அதில் கர்ப்பிணிப் பெண்களும் அடங்கலாக, உள்ளக சிகிச்சை பெற்று வந்தனர். இதனால் சேவைகளை தாமதமின்றி மீள ஆரம்பிப்பது மிக முக்கியமானதாக இருந்தது.

“ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் உடனடியாக எங்களுக்கு ஆதரவளித்தது. அவர்களின் விரைவான நடவடிக்கையால் சில நாட்களிலேயே சேதமடைந்த பகுதிகளைச் சீரமைக்க முடிந்தது. தற்போது அறுவைச் சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நெருக்கடியான தருணத்தில் எங்களுடன் பக்கபலமாக இருந்த ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்திற்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவிக்கிறேன்,” என வைத்தியர் அத்தநாயக்க நன்றியுடன் குறிப்பிட்டார்.

மூன்று வாரங்களுக்குள் மதிப்பீட்டிலிருந்து பணிநிறைவு வரை சென்ற இந்த விரைவான நடவடிக்கை, பேரிடர் காலங்களில் தேசிய அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் நம்பகமான பங்காளியாக UNFPA செயல்படுவதை வெளிப்படுத்துகிறது. அத்தியாவசிய சுகாதார உட்கட்டமைப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், பெண்கள், சிறுமிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நிறைகுறைந்த குழந்தைகளின் உயிர்காக்கும் சிகிச்சை சேவைகளை பெறுவதை UNFPA உறுதி செய்துள்ளது.

டித்வா சூறாவளிக்குப் பிந்தைய மீட்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் மரியாதையை பாதுகாக்கும் நோக்கில், அவசியமான சேவைகளை மீளமைத்தல், முக்கிய மருத்துவப் பொருட்களை வழங்குதல் மற்றும் முன்னணிச் சுகாதார அமைப்புகளுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குதல் என்பவற்றில் UNFPA தனது மனிதாபிமானப் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது.