தென் சூடானில் எதிரணிக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு மனிதாபிமான உதவியை தடுத்து நிறுத்தும் அரசு – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கடும் கண்டனம்

Doctors Without Borders (MSF) strongly condemns South Sudan government restrictions blocking humanitarian and medical aid to opposition-controlled areas in Jonglei State, warning of life-threatening consequences for civilians.

தென் சூடானில் எதிரணிக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு மனிதாபிமான உதவியை தடுத்து நிறுத்தும் அரசு – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கடும் கண்டனம்

தென் சூடான் அரசாங்கம், எதிரணியின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மனிதாபிமான உதவிகளைத் திட்டமிட்டு தடுத்து வருவதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜொங்லெய் மாநிலத்தில் உள்ள லங்கியன், பியேரி மற்றும் அகோபோ உள்ளிட்ட பகுதிகளில், 2025 டிசம்பர் மாதம் முதல் இந்தக் கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதாக  எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மனிதாபிமான விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், மருத்துவப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ பணியாளர்களை அந்தப் பகுதிகளுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகள் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நீண்டகால அல்லது உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என  எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனவரி 29 ஆம் திகதி நிலவரப்படி, லங்கியன் மற்றும் பியேரி பகுதிகளில் இருந்து குறைந்தது 23 தீவிர நோயாளிகள் உடனடி மருத்துவ மாற்று சிகிச்சைக்காக அனுப்பப்பட வேண்டிய நிலையில் இருப்பதாகவும், அவர்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஜொங்லெய் மாநிலத்தில் மனிதாபிமான மற்றும் மருத்துவ அணுகலை அரசு தடுத்து வந்தால் நோயாளிகள் உயிரிழப்பது தவிர்க்க முடியாதது,” என தென் சூடானுக்கான எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் பணிப்பாளர் அப்துல்லா ஹுசைன் தெரிவித்துள்ளார்.

“மனிதாபிமான உதவிகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதன் விலையை செலுத்துவது பொதுமக்களே. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதிகாரப்பூர்வ நபர்கள் சிலர் பொதுமக்கள் மீது பெரும் வன்முறை மற்றும் கட்டாய இடம்பெயர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என வெளிப்படையாக பேசியுள்ளதாகவும், இது மிகவும் அபாயகரமான நிலையை உருவாக்குவதாகவும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, லங்கியன் மற்றும் அகோபோ பகுதிகளில் இருந்து MSF தனது பணியாளர்களை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பியேரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் அவசர மற்றும் உயிர்காக்கும் சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. ஜனவரி 29 அன்று, ஆயுத மோதல் ஏற்படும் அபாயம் காரணமாக பியேரியில் இருந்த MSF குழுவும் அந்த மருத்துவ நிலையத்தை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் பெரும்பாலோர் வெளியேற்றப்பட்டு, அவசர மருத்துவ உபகரணங்களுடன் குழுவினர் அந்தப் பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.

லங்கியன் மற்றும் பியேரி பகுதிகளில் சுமார் 2.5 இலட்சம் மக்களுக்கும், அகோபோவில் மேலும் 1.12 இலட்சம் மக்களுக்கும்  எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு மட்டுமே ஒரே மருத்துவ சேவையளிப்பாளராக இருந்து வருகிறது. அரசாங்கம் அனுமதி வழங்காவிட்டால், சுமார் 4 இலட்சம் மக்கள் எந்தவிதமான மருத்துவ சேவையும் இன்றி விடப்படக்கூடும் என  எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.

“ஜொங்லெய் மாநிலத்தில் தொடரும் மோதல்கள் மற்றும் மக்கள் இடம்பெயர்வு, ஏற்கனவே பலவீனமான மக்களின் நிலையை மேலும் மோசமாக்குகிறது,” என தென் சூடானுக்கான எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு செயற்பாட்டு மேலாளர் குல் பட்ஷா தெரிவித்துள்ளார்.

“பொதுமக்கள், மனிதாபிமான பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிலையங்களை பாதுகாப்பது அனைத்து ஆயுத குழுக்களும் அரசியல் தரப்புகளும் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பாகும். மருத்துவ சேவைகளில் தலையீடு செய்வது உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தெற்கு சூடானில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி சர்வதேச சமூகத்தின் அவசர கவனத்தைப் பெற வேண்டிய நிலையை எட்டியுள்ளது. பல்வேறு நெருக்கடிகள் ஒரே நேரத்தில் தாக்கி வரும் நிலையில், தற்போதைய உதவிகள் தேவையை பூர்த்தி செய்யவில்லை என  எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

வறட்சியான காலத்தில் – வீதிகள் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கும் இச்சமயத்தில் – மருத்துவ நிலையங்களுக்கு தேவையான பொருட்களை மீண்டும் அனுப்ப முடியாவிட்டால், அதன் விளைவுகள் பேரழிவாக மாறும் என  எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

1983 ஆம் ஆண்டிலிருந்து தென் சூடானில் செயல்பட்டு வரும்  எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு, தற்போது ஏழு மாநிலங்களிலும் இரண்டு நிர்வாகப் பகுதிகளிலும் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டில் மட்டும்,  எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு 8.3 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநோயாளர் சிகிச்சைகள், 93,000க்கும் மேற்பட்ட உள்நோயாளர் சிகிச்சைகள், 12,000 அறுவைச் சிகிச்சைகள் மற்றும் 1.07 இலட்சம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது.

ஜொங்லெய் மாநில மக்களின் உயிர்களை பாதுகாக்கவும், மருத்துவ சேவைகள் சீர்குலையாமல் தொடரவும், நிலையான மற்றும் தடையில்லா மனிதாபிமான அணுகல் அவசியம் என எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.