டித்வா சூறாவளி பாதிப்பு: இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை 206 மில்லியன் டொலர் அவசர நிதிக்கு அனுமதி
The IMF Executive Board has approved SDR 150.5 million in emergency funding for Sri Lanka to respond to the economic and humanitarian crisis triggered by Cyclone Dithva.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ள சர்வதேச நாணய நிதியம் (IMF), இலங்கைக்கு SDR 150.5 மில்லியன் (சுமார் 206 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அவசர நிதியை வழங்க அதன் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிதி, Rapid Financing Instrument (RFI) திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதுடன், இது இலங்கையின் கோட்டா அளவின் 26 சதவீதத்துக்கு இணையானதாகும்.
2025 நவம்பர் 28ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளி, *600க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்ததுடன், பல மில்லியன் மக்களை பாதித்துள்ளது. வெள்ளப்பெருக்குகள் மற்றும் மண்சரிவுகளால், 100,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததுடன், முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்து, நாட்டின் வாழ்வாதாரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பேரழிவு காரணமாக உருவான அவசர நிதி மற்றும் வெளிநாட்டு செலுத்தல் (Balance of Payments) அழுத்தங்களை சமாளிப்பதற்காகவே இந்த நிதி உதவி வழங்கப்படுவதாக IMF தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் Extended Fund Facility (EFF) திட்டத்தின் ஐந்தாம் மீளாய்வு நிறைவு நிலையை அணுகிய வேளையில், டித்வா சூறாவளி தாக்கம் ஏற்பட்டது.
பேரழிவின் பொருளாதார தாக்கங்களை மதிப்பீடு செய்யவும், மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் IMF திட்டம் எவ்வாறு சிறப்பாக பங்களிக்க முடியும் என்பதை ஆய்வு செய்யவும் கால அவகாசம் தேவைப்படுவதால், ஐந்தாம் மீளாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்காக, 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் IMF குழு இலங்கைக்கு விஜயம் செய்து, மீண்டும் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
IMF-இன் துணை முகாமைத்துவ பணிப்பாளரும், செயற்பாட்டுத் தலைவர் பொறுப்பையும் வகிக்கும் கெஞ்சி ஒகமுரா (Kenji Okamura) வெளியிட்ட அறிக்கையில்,
“டித்வா சூறாவளி இலங்கையை மிக மோசமாக தாக்கியுள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உடனடி மனிதாபிமான மற்றும் மறுசீரமைப்பு தேவைகள் ஏற்பட்டுள்ளன. RFI கீழ் வழங்கப்படும் இந்த அவசர நிதி, அரசின் நிதிச் சுமைகளையும் வெளிநாட்டு செலுத்தல் தேவைகளையும் சமாளிக்க உதவும்.” என்று தெரிவித்தார்.
அரசு உடனடியாக நிவாரணத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டில் காணப்பட்ட வலுவான நிதி செயல்திறன் இதற்கு ஆதரவாக இருந்ததாகவும், தேவையானபோது இலங்கை மத்திய வங்கி நிதி அமைப்புக்கு ஆதரவு வழங்க தயாராக உள்ளது என்றும் IMF குறிப்பிட்டுள்ளது.
பொது நிதி முகாமைத்துவச் சட்டத்தின் (PFM Act) கீழ், முழுமையான கண்காணிப்பு, வெளிப்படையான பொதுத் தகவல் வெளியீடுகளுடன் மேற்கொள்ளப்படும் எனவும், மத்திய வங்கி அரசுப் பட்ஜெட்டுக்கு பண அச்சிடுதல் (monetary financing) மேற்கொள்ளாது என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் நிலையில், IMF ஆதரவு பெற்ற சீர்திருத்தங்கள் நல்ல பலனைத் தருவதாகவும், எனினும், பொருளாதாரம் இன்னும் முன்னைய நிலைக்கு முழுமையாக மீளாததால் பாதிப்பு சாத்தியம் தொடர்கிறது என்றும் IMF சுட்டிக்காட்டியுள்ளது.
“இந்த கடினமான நேரத்தில் இலங்கை மக்களுடன் IMF நிற்கிறது. நாட்டின் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
editor