புத்தளத்தில் கண்டல்தாவர மீளமைப்பு திட்டம் : சூழலுக்கான தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்த SLT-MOBITEL
புத்தளம் மாவட்டத்தில், வனாதவில்லுவ, புபுதுகம பிரதேசத்தில் புதிய கண்டல் தாவர மீளமைப்புத் திட்டத்தை SLT-MOBITEL முன்னெடுத்துள்ளது. இதனூடாக, வன பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து, 4.2 ஹெக்டெயர் பரப்பிலமைந்த கைவிடப்பட்ட இறால் பண்ணைகள் மற்றும் உப்பளங்களையும் ஐந்து வருட காலப்பகுதியில் கண்டல்தாவர சூழல் கட்டமைப்பாக மாற்றியமைக்கப்படும்.
நிறுவனத்தின் ESG தொனிப்பொருளான ‘Co-Connection’ என்பதுடன் இணைந்ததாக இந்தத் திட்டம் அமைந்திருப்பதுடன், நிறுவனத்தின் செயற்பாடுகள், சூழல் மற்றும் சமூகம் ஆகியவற்றுக்கிடையே சுமூகமான இணைந்த இருப்பை பேணுவதற்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும்.
ஐந்து வருட காலப்பகுதிக்கு முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், சூழக் காணப்படும் கண்டல்தாவரங்களை கவனமான முறையில் பரிசோதிப்பது, சரியான உயிரினங்களை பயிரிட்டு, இப்பகுதிக்கு அத்தாவரங்களின் பரம்பலை ஏற்படுத்தல், தாவரங்களின் பிழைத்திருப்பு, வளர்ச்சி மற்றும் இயற்கை படுகை தொடர்பான விஞ்ஞான ரீதியான தரவுகளை சேகரித்தல் மற்றும் பராமரிப்பு போன்றன அடங்கியிருக்கும். முக்கியமாக, பெருமளவான நிதித் தொகையை பயன்படுத்தி, நீரோட்டத்தை மீள ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதனூடாக, கடல் அலை நீர் இந்த கண்டல் தாவர வளர்ச்சிக்கு நேரடியாக பங்களிப்பை ஏற்படுத்தும்.
இந்த கண்டல் தாவர மீளமைப்புத் திட்டம் பல்வேறு ஐக்கிய நாடுகள் நிலையான அபிவிருத்தி இலக்குகளுடன் (SDGs) பொருந்துவதாக அமைந்துள்ளது. குறிப்பாக SDG 13: காலநிலை மாற்றம் தவிர்ப்பு செயற்பாடு, SDG 14: நீரின் கீழான வாழ்க்கை மற்றும் SDG 15: நிலத்தில் வாழ்க்கை போன்றன அடங்கும். அத்துடன், உயிரியல் பரம்பல் தொடர்பில் கும்மிங்- மொன்ட்ரியல் உயரியல் பரம்பல் கட்டமைப்பு மாநாட்டின் கீழ் மீளமைப்பு என்பது பிரதான இலக்காக அமைந்துள்ளது. SLT-MOBITEL இன் நிலைபேறான அறிக்கையிடலையும் நிலைப்படுத்தலையும் வலிமைப்படுத்துவதாக இந்த நடவடிக்கை அமைந்திருப்பதுடன், 2040 ஆம் ஆண்டுக்கான நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.
காபனீரொட்சைட் வடிகட்டலில் கண்டல் தாவரங்கள் மிகவும் பயனுள்ளவை. காலநிலை மாற்ற கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் இவை முக்கிய பங்காற்றும். கடலரிப்பு மற்றும் சூறாவளியினால் கடல் ஊடுருவல் போன்றவற்றுக்கான இயற்கை தடுப்புகளாகவும் இவை அமைந்துள்ளன. அதனூடாக உட்கட்டமைப்புகள் மற்றும் சமூகங்களை பாதுகாப்பதில் பங்களிப்பு வழங்கி, கரையோர வசதிகளுக்கு ஏற்படக்கூடிய சேதங்களிலிருந்து பாதுகாக்கின்றன.
சூழலுக்கு பொறுப்பான வகையில் செயலாற்றும் SLT-MOBITEL, தனது காபன் நடுநிலைப்படுத்தல் இலக்குகளை நிவர்த்தி செய்ய இந்தத் திட்டத்தை பயன்படுத்த முன்வந்துள்ளது. நிறுவனத்தின் இதர சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் இயற்கை உயிரினங்களை, உயிரியல் பரம்பல், சூழல்கட்டமைப்புகள் போன்றவற்றை பாதுகாத்தல் மற்றும் மீள்வனாந்தரச் செய்கை முயற்சிகளில் பெருமளவு பங்கேற்றல் போன்றன அடங்கியுள்ளன.
திட்டத்தினூடாக, உள்ளுர் சமூகத்தாரை ஈடுபடுத்தி உறவுகளை கட்டியெழுப்ப SLT-MOBITEL எதிர்பார்க்கின்றது. உள்ளுர் சமூகத்தார் மத்தியில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி மற்றும் கல்விசார் வாய்ப்புகளை வழங்கி அவர்களின் வரவேற்பை இந்தத் திட்டம் பெற்றுள்ளது.
மாசுகளை வடிகட்டி நீரின் தரத்தை மேம்படுத்துகின்றமையால் சமூகத்தாருக்கு மேலதிக அனுகூலங்களை இந்தத் திட்டம் வழங்கும். மேலும், மீன் மற்றும் கடலுணவு போன்ற வளங்களையும் கண்டல் தாவரங்கள் வழங்கும்.
புத்தளம் கண்டல்தாவர செயற்திட்டத்தினூடாக சூழல் நிலைபேறாண்மை மீதான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தின் வர்த்தக நாமத்தின் கீர்த்தியை மேம்படுத்தியுள்ளது. சூழல் வழிநடத்தல் தொடர்பில் நிறுவனத்தின் முன்மாதிரியான செயற்பாட்டையும் பிரதிபலித்துள்ளதுடன், நிலைபேறான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மீளுறுதி செய்துள்ளது.