சவாலான சூழலிலும் நிறைவடைந்த அரையாண்டில் நடுத்தர வருமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள SLT-MOBITEL
SLT - Mobitel நிறுவனமானது 2024இல் முடிவடைந்த அரையாண்டில் நடுத்தர வருமான வளர்ச்சியை பதிவு செய்துள்ள அதே வேளை செலவு கட்டுப்படுத்தல் முயற்சிகள் மூலம் சேமிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
சவாலான சந்தை சூழலின் மத்தியில் 2024இன் முதற் பாதியில் SLT-MOBITELஇன் செயல்திறன் அதன் நெகிழ்வுத்தன்மை மற்றும் இணக்கத்தன்மையை சுட்டிக் காட்டுகிறது. வெற்றிகரமான செலவு-சேமிப்பு முயற்சிகளுடன் கூடிய நடுத்தர வருமான வளர்ச்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன.
2024இன் முடிவடைந்த அரையாண்டில் குழுமத்தின் மொத்த வருமானம் ரூ. 53.5 பில்லியனை எட்டியுள்ளமை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 1.6% அதிகரிப்பைக் காட்டுகிறது. குழு மட்டத்தில் மொத்த இலாபம் 4.0%ஆல் அதிகரித்து ரூ. 20.9 பில்லியனாக உள்ளது.
மொத்த இலாப வீதம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 38.1%ஆக இருந்து 39.0%ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் புதிய இணைப்புகளுக்கான குறைவான தேவை மற்றும் தற்போதைய வாடிக்கையாளர்களின் சேவை வெளியேற்றம் போன்ற சவால்மிக்க சந்தை நிலவரங்கள் மத்தியில் இந்த நடுத்தர வளர்ச்சி அடையப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குழுமத்தின் முடிவடைந்த அரையாண்டிற்கான EBITDA (வட்டி, வரிகள், தேய்மானம், கடன் தவணை செலுத்துதல் ஆகிய செலவீனங்கள் கழிக்கப்படும் முன் உள்ள வருமானம்) 17.1% ஆக அதிகரித்து ரூ. 18.0 பில்லியனை எட்டியதுடன் தொழிற்பாட்டு இலாபம் 54.5%ஆல் அதிகரித்து ரூ.3.6 பில்லியனாக இருந்தது. மேலும் 2023இன் முடிவடைந்த அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2024இன் முடிவடைந்த அரையாண்டில் EBITDA, 29.2%இல் இருந்து 33.6% அதிகரிப்பானது நிறுவனத்தின் சேவைத் தரத்தைப் பராமரிக்கும் அதே வேளை செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் குழுவின் திறனைப் பிரதிபலிக்கிறது.
SLT-MOBITEL குறைக்கப்பட்ட நிதிச் செலவுகளிலிருந்தும் பயனடைந்தது. குறிப்பாக குறைந்த வட்டி விகிதங்கள் காரணமாக குழு மட்டத்தில் வட்டிச் செலவுகள் 19.5%ஆல் குறைந்துள்ளது. இது குழுமத்தின் அடித்தள முன்னேற்றத்திற்கு பங்களித்தது. இதன் விளைவாக 2024இன் முடிவடைந்த அரையாண்டில் குழுமத்தின் தேறிய நட்டமானது 2023இன் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ. 1,159 மில்லியனிலிருந்து ரூ. 323 மில்லியனாக குறைவடைந்துள்ளது.
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின், நிறுவன மட்ட வருமான வளர்ச்சியானது 2024ஆம் முதல் அரையாண்டில் 0.9% என்ற சிறிய அதிகரிப்புடன் 35.0 பில்லியனாக இருந்தது. தொழிற்பாட்டு இலாபம் 2.9% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
வருடாந்த பராமரிப்பு செலவு, வாடகை செலவு, பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவுகள் போன்ற தொழிற்பாட்டு செலவு-சேமிப்பு முன்முயற்சிகள் குறைக்கப்பட்ட தொழிற்பாட்டு செலவுகளுக்கு பங்களித்ததுடன் ஒட்டுமொத்த இலாபத்தையும் மேம்படுத்தியது.
முக்கியமாக வட்டி விகிதக் குறைப்பு காரணமாக நிறுவனம் நிதிச் செலவில் 27.2% சேமிப்பை மேற்கொள்ள முடிந்தது. இதன் விளைவாக, நிறுவனம் 2023இன் முதல் அரையாண்டின் ரூ.401 மில்லியன் நட்டத்துடன் ஒப்பிடுகையில் 2024இன் முதல் அரையாண்டில் ரூ. 272 மில்லியன் தேறிய இலாபத்தினை பதிவு செய்தது.
நிறுவனம் எதிர்கால வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்க அதன் தந்திரோபாய முயற்சிகளை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்துகிறது. அதிகரித்த செயற்பாட்டுத் திறன் மற்றும் செலவு கட்டுப்பாட்டு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுடன், SLT-MOBITEL ஆனது வளர்ந்து வரும் போட்டிமிகு சந்தையில் முன்னோக்கிச் செல்லவும் அதன் பங்குதாரர்களுக்கு தொடர்ச்சியான பேண்தகு வெகுமதிகளை வழங்க தயாராக உள்ளது.
மொபிடெல் நிறுவனமானது, பெறுமதி சேர் வரி 3% அதிகரித்த போதிலும் 2023இன் முதல் அரையாண்டுடன் ஒப்பிடும்போது 2024இல் முதல் அரையாண்டில் 3.6% வருமான அதிகரிப்பை பேணியுள்ளது.
பிரதானமாக அதிகரித்து வரும் broadband சேவைகளுக்கான தேவை மற்றும் சேவை வழங்குதலில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் போன்ற காரணிகளால் இவ்வருமான அதிகரிப்பு அடையப்பட்டது. நிலையான வருமான வளர்ச்சியும் செலவுக் குறைப்பும் இணைந்து 2024இன் முதல் அரையாண்டில் EBITDA, 26%ஆல் வளர்ச்சி அடைந்துள்ளதுடன் இலாபத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது, ஒட்டுமொத்தமாக மொபிடெல், செயற்பாட்டுத் திறன் மற்றும் இலாபத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியது.
தொழிற்பாட்டு இலாபம் 2023இன் முதல் அரையாண்டில் ரூ.895 மில்லியன் நட்டத்தில் இருந்து 2024இன் முதல் அரையாண்டில் இலாபமாக ரூ. 182 மில்லியன் ஆக மாறியது. 2023ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2024இன் முதல் அரையாண்டில் நட்டமானது 28.9%ஆல் குறைந்துள்ளது.
மேலும் வலையமைப்பு உட்கட்டமைப்பில் நடந்து வரும் முதலீட்டிற்கு மேலதிகமாக, மொபிடெல் புதிதாக Q2இல் வாங்கிய 2.3GHz அலைவரிசையின் 25MHz மற்றும் 850MHz அலைவரிசையின் 5MHz ஆகியவை வலைமைப்பின் திறனையும் கவரேஜையும் குறிப்பிடத்தக்களவு உயர்த்துவதுடன் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்திற்கு வழிவகுக்கும்.
SLT-MOBITEL எதிர்காலத்தில் டிஜிட்டல் சேவை வழங்குவதில் பிரதானமாக உள்ளது. இதன் பொருட்டு வலையமைப்பு உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், டிஜிட்டல் சேவை செயற்பாடு விரிவுபடுத்துதல் மற்றும் அனைத்துப் பிரிவுகளிலும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.