கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கு தடை

கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கு தடை

ஊக்கமருந்து பாவனை தடுப்பு விதிகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கு சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.


உடன் அமுலுக்கு வரும்வகையில் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடை மறு அறிவித்தல்ரை நீடிக்கும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அண்மையில் நடந்து முடிந்த லங்கா பிறீமியர் லீக் (LPL) போட்டிகளின்போது இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தினால் (SLADA) நடத்தப்பட்ட ஊக்கமருந்து பாவனை தொடர்பான பரிசோதனையின் மூலம் நிரோஷன் திக்வெல்ல ஊக்கமருந்து பாவனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.


விளையாட்டுத்துறையில் நேர்மைத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் இத்தகைய பரிசோதனைகள் நடத்தப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


உலக ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தின் (WADA) வழிகாட்டல்களுக்கு அமைய விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து இத்தகைய பரிசோதனை நடத்தப்படுவது வழமையாகும்.


தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையற்ற விளையாட்டாக கிரிக்கெட்டை உறுதிசெய்வதே இதன் நோக்கம் என ஸ்ரீலங்கா கிரிக்;கெட் தெரிவித்துள்ளது.


விளையாட்டில் ஊக்கமருந்து தடுப்பு விதிகள் மீறப்படுவதைத் தவிர்க்கும் வகையில் உள்ளூர் போட்டிகள் நடைபெறும்போது விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் இத்தகைய பரிசோதனைகளை நடத்துவதுண்டு.
.