ஐ.சி.சி. விடுத்த வேண்டுகோளை இந்தியா நிராகரித்தது
மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்துமாறு ஐசிசி விடுத்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்துமாறு ஐசிசி விடுத்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஒன்பதாவது மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் அக்டோபர் மாதம் 3ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதிவரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், பங்களாதேஷில் அண்மையில் இடம்பெற்ற அரச விரோத வன்முறைகளாலும் அதனால் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களாலும் இப் போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு ஐசிசி எண்ணியுள்ளது. இது தொடர்பாக இந்த மாதம் 20ஆம் திகதி முடிவெடுக்கவுள்ளது.
இப் போட்டியை நடத்துவதற்கு இந்தியா மறுத்துள்ளதால் பெரும்பாலும் இலங்கையில் அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்தில் இப் போட்டி நடத்தப்படாலம் என எதிர்பார்க்கப்படுகிறது.
'உலகக் கிண்ணத்தை நடத்த முடியுமா என அவர்கள் (ICC) எம்மிடம் கேட்டது. நான் முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டேன்' என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
'இப்போது பருவமழைக் காலத்தில் இருக்கிறோம். அதனைவிட அடுத்த வருடம் மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியை நடத்தவுள்ளோம். தொடர்ச்சியாக உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தவேண்டும் என்ற ஒப்புதலைக் கொடுக்க நான் விரும்பவில்லை' என்றார் அவர்.
இதேவேளை, பங்காதேஷின் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அனைத்து விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஐசிசி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
'பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினர், அவர்களது பாதுகாப்பு முகவர்கள், எமது சுயாதீன பாதுபாப்பு ஆலோசர்கள் ஆகியோருடன் இணைந்து பங்களாதேஷின் முன்னேற்றங்களை ஐசிசி உன்னிப்பாக அவதானித்துவருகிறது' என ஐசிசி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'போட்டியில் பங்குபற்றும் அனைவரினதும் உயிர் பாதுகாப்பு மற்றும் நலன்களே எம் முன் உள்ளே இருக்கும் பிரதான விடயமாகும்' என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியை நடத்தவேண்டும் என்பதில் பங்களாதேஷின் புதிய இடைக்கால அரசாங்கம் இறுதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
எவ்வாறாயினும் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகியன விடுத்துள்ள கடுமையான பயண பாதுகாப்பு ஆலோசனைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு உள்ள பிரதான சவாலாகும்.
பாதுகாப்பு சவால்கள் ஒருபுறமிருக்க, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பெரும் நெருக்கடியில் உள்ளது. அவாமி லீக் அரசாங்கம் கடந்த 5ஆம் திகதி கவிழ்க்கப்பட்டதை அடுத்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான நஸ்முல் ஹசன் பதவியிலிருந்து விலகினார். அத்துடன் அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய பல சபைத் தலைவர்களுக்கு இடையிலான தொடர்புகளும் அற்றுப்போயுள்ளது.
இந் நிலையில், 'இப்போதைக்கு அவர்களுடன் (பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகள்) நாங்கள் எதுவும் பேசவில்லை' எனக் குறிப்பிட்ட ஷா, 'ஒரு புதிய அரசு அங்கு பொறுப்பேற்றுள்ளது. அவர்கள் எங்களை அணுகக்கூடும். அல்லது நான் அவர்களை அணுகுவேன். இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான தொடர் எங்களுக்கு முக்கியமானது' என்றார்
பங்களாதேஷ் ஆடவர் அணி தற்போது பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ளதுடன் அங்கு 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பயின்ஷிப்பில் விளையாடவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு விஜயம செய்யவுள்ளது.