வடக்கு, கிழக்கை மையப்படுத்தி உலக நாடுகளுடன் இணைப்பு – ஜெர்மனி வாழ் துஷான் குணபாலசிங்கம்

German-based entrepreneur Dushan Gunabalanasinghe is spearheading initiatives to connect northern and eastern Sri Lanka with global countries through tourism, education, and investment projects.

வடக்கு, கிழக்கை மையப்படுத்தி உலக நாடுகளுடன் இணைப்பு – ஜெர்மனி வாழ் துஷான் குணபாலசிங்கம்

புலம்பெயர் தமிழர்களின் இலங்கைக்கான முதலீட்டு ஒத்துழைப்புகள் வெறும் வணிக நோக்கத்துடன் மட்டுப்படுவதில்லை; அவை தாய்நாட்டின் மீதான ஆழ்ந்த பற்றும் உணர்வுப் பிணைப்பும் கொண்டவை என, ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை வம்சாவளித் தமிழரும் தொழிலதிபருமான துஷான் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள், முதலீட்டுச் சபை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறையுடன் தொடர்புடையவர்களைச் சந்தித்து பல்வேறு ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

சர்வதேச தரத்திலான கப்பல் போக்குவரத்து மற்றும் சுற்றுலா

ஜெர்மன் நிறுவனமான TUI Entertainment & Travel குழுமத்தின் ஆசியக் கடற்பயணக் கப்பல் செயல்பாடுகளின் (Ocean Cruise Line) தலைமைப் பொறுப்பை வகித்து வரும் துஷான் குணபாலசிங்கம், இலங்கையை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு போட்டித்திறன் மிக்க சுற்றுலா மையமாக மாற்றத் திட்டமிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, 5,000 முதல் 7,000 பயணிகள் வரை பயணிக்கக்கூடிய பிரம்மாண்ட சர்வதேசக் கடற்பயணக் கப்பல்களை இலங்கையின் முக்கிய துறைமுகங்களுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையின் கப்பல் சுற்றுலாத் துறையை விரிவுபடுத்த Aitken Spence நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதோடு, The Ritz-Carlton Yacht Collection போன்ற உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை இலங்கையுடன் இணைக்கும் முயற்சிகளையும் அவர் முன்னெடுத்து வருகிறார்.

கல்வித்துறையில் சர்வதேச ஒத்துழைப்பு

இலங்கை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கல்வித்துறையில் பாரிய மாற்றங்களை உருவாக்கும் நோக்குடன் பல்வேறு திட்டங்களை துஷான் குணபாலசிங்கம் முன்னெடுத்து வருகிறார். அதன் அடிப்படையில், யாழ்ப்பாணம் (மருத்துவம்), கொழும்பு மற்றும் ரஜரட்ட (சுற்றுலா), மொரட்டுவ (தொழில்நுட்பப் பொருளாதாரம்) ஆகிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஜெர்மன் பல்கலைக்கழகங்களின் கல்விப் பங்களிப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சம்பத் பெர்னாண்டோவை தெற்கு ஜெர்மனியின் முக்கிய பல்கலைக்கழகத்துடன் இணைத்து, மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் கூட்டு ஆய்வுகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், உள்ளூர் மாணவர்கள் ஜெர்மனியில் இலவசக் கல்வியைத் தொடருவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றம்

“இந்தியாவில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்த தொழிற்சாலையை, எனது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் இலங்கைக்கே கொண்டு வந்தேன். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்,” எனத் தெரிவித்த துஷான் குணபாலசிங்கம், Cinnamon Hotel Group மற்றும் Hilton Residences ஆகிய நிறுவனங்களுடன் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், “சர்வதேச கடன்களைப் பெற்றுக்கொண்டு ஒரு நாட்டை முன்னேற்ற முடியாது என்பதே நிதர்சனம். ஆனால் உலக நாடுகள் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கை மையப்படுத்திய முதலீட்டுத் திட்டங்களின் ஊடாக இலங்கையை உலக நாடுகளுடன் இணைப்பதே எமது பிரதான நோக்கம்,” என அவர் சுட்டிக்காட்டினார்.

2027 இலக்குகள்

2027ஆம் ஆண்டுக்குள் தனது செயல்பாடுகளை இலங்கையில் முழுமையாக விஸ்தரிக்க இலக்கு நிர்ணயித்துள்ள துஷான் குணபாலசிங்கம், ஜனாதிபதி செயலகத்தின் கலாநிதி குமணாயக்க, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், துறைமுக அதிகார சபைத் தலைவர் மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உள்ளிட்ட உயர்மட்ட அரச அதிகாரிகளைச் சந்தித்து தனது எதிர்காலத் திட்டங்களை முன்வைத்துள்ளார்.