உலகம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம் !

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு இன்று திங்கட்கிழமை (19) கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்கால உணவுப் பாதுகாப்பிற்காக ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் விவசாய உணவு முறைமைகளை மீட்டெடுத்தல் மற்றும் சீர்திருத்துதல் குறித்த ஐ.நா. உணவு விவசாய அமைப்பு UN FAO மாநாட்டை ஆரம்பிப்பதற்காக உணவு விவசாய அமைப்பின் (FAO) பணிப்பாளர் நாயகம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இலங்கை – உணவு விவசாய அமைப்பின் (FAO) பணிப்பாளர் நாயகம், கலாநிதி டொங்யூ, ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான உணவு விவசாய அமைப்பின் (FAO பிராந்திய மாநாட்டின் 37 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்தடைந்தார்.

46 உறுப்பு நாடுகளின் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுவின் தலைவர்கள் இந்த நிகழ்விற்காக கொழும்பில் இன்று கூடுகின்றனர்.

35 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டை ( APRC37 ) இலங்கை நடத்துகிறது.
பணிப்பாளர் நாயகத்தை விமான நிலையத்தில் இலங்கை கமத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி, உணவு விவசாய அமைப்பின் (FAO) உதவிப் பணிப்பாளர் நாயகமும் பிராந்திய பிரதிநிதியாகிய ஜோங்-ஜின் கிம் மற்றும் இலங்கைக்கான உணவு விவசாய அமைப்பின் (FAO) பிரதிநிதி விம்லேந்திர ஷரன் ஆகியோர் வரவேற்றனர்.

பணிப்பாளர் நாயகம் இங்கு தங்கியிருக்கும் காலத்தில், விவசாயப் பகுதிகளுக்கு விஜயம் செய்வதுடன் இலங்கைத் தலைவர்கள் மற்றும் ஏனைய ஆசிய-பசுபிக் நாடுகளின் அமைச்சர்களுடன் இருதரப்புக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் விவசாய உணவு முறைமைகளை சீர்திருத்துவதற்கான ஒரு முக்கிய சர்வதேசரூபவ் பலதரப்பு மைல்கல்லைக் குறிக்கும் #APRC37 மாநாடானது, உணவு விவசாய அமைப்பின் (FAO) ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றது.

இந்த மாநாடு இன்று 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறுகிறது.

ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டின் அமைச்சர்கள் அமர்வை பெப்ரவரி 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொற்றுநோய் மற்றும் பிற நெருக்கடிகளில் இருந்து முழுமையாக மீண்டு வருவதற்கான பாதையை கோடிட்டுக் காட்டுவதும் யாரையும் விட்டுவிடாது அனைவரையும் சிறந்த உற்பத்தி சிறந்த போசாக்கு, சிறந்த சுற்றுச்சூழல் மற்றும் சிறந்த வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும் பிராந்தியத்தின் வேளாண் உணவு முறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் மாற்றுவதற்குமான வழிகளை வலுப்படுத்துவதுமே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

Hot Topics

Related Articles