உலகம்

இலங்கையை நடுங்க வைத்த ஸிம்பாப்வே வரலாற்று வெற்றியை பதிவு செய்தது !

இலங்கைக்கும் ஸிம்பாப்வேக்கும் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (16) இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்து மீதம் இருக்க ஸிம்பாப்வே 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 174 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 19.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற 5 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் ஸிம்பாப்வே வெற்றிபெற்றது இதுவே முதல் தடவையாகும்.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 1 – 1 என ஸிம்பாப்வே சமப்படுத்திக்கொண்டுள்ளது. முதலாவது போட்டியில் இலங்கை 3 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

க்ரெய்க் ஏர்வின் குவித்த அரைச் சதம், கடைசி 2 ஓவர்களில் லூக் ஜொங்வே, க்ளைவ் மதண்டே ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் என்பன ஸிம்பாப்வேயின் வெற்றியை உறுதிசெய்தன.

மொத்த எண்ணிக்கை 22 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் டினாஷே கமுன்ஹூகம்வே (12) ஆட்டம் இழந்தார்.

எனினும் க்ரெய்க் ஏர்வின், ப்றயன் பெனெட் (25) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து ஸிம்பாப்வே அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் சிக்கந்தர் ராஸா (8), சோன் வில்லியம்ஸ் (1), சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய க்ரெய்க் ஏர்வின், ரெயான் பேர்ல் (13) ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.

க்ரெய்க் ஏர்வின் 54 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 70 ஓட்டங்களைப் பெற்றார்.

ஸிம்பாப்வேயின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது. டில்ஷான் மதுஷன்க வீசிய 19ஆவது ஓவரில் 10 ஓட்டங்களும் மெத்யூஸ் வீசிய கடைசி ஓவரில் 24 ஓட்டங்களும் குவிக்கப்பட ஸிம்பாப்வே அபார வெற்றியை ஈட்டியது.

கடைசி ஓவரில் மெத்யூஸ் வீசிய முதல் பந்து சிக்ஸ் ஆனதுடன் நோபோலாகவும் அமைந்தது. ப்றீ ஹிட்டான அடுத்த பந்தில் பவுண்டறியும் 2ஆவது பந்தில் சிக்ஸும் விளாசப்பட்டன. 3ஆவது பந்தில் ஓட்டம் பெறப்படவில்i9ல. 4ஆவது பந்தில் லூக் ஜொங்வே கொடுத்த இலகுவான பிடியை மஹீஷ் தீக்ஷன தவறவிட்டார். அடுத்த பந்தில் க்ளைவ் மதண்டே அபாரமாக சிக்ஸ் விளாசி ஸிம்பாப்வேயின் வெற்றியை உறுதிசெய்தார்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைக் குவித்தது.

உதவி அணித் தலைவர் சரித் அசலன்க, முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்து அணியை சிறந்த நிலையில் இட்டதுடன் இரசிகர்களுக்கும் விருந்து படைத்தனர்.
முதலாவது போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் இலங்கையின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது.

பெத்தும் நிஸ்ஸன்க (4), குசல் பெரேரா (0), குசல் மெண்டிஸ் (4), சதீர சமரவிக்ரம (19) ஆகிய நான்கு முன்வரிசை வீரர்களும் துடுப்பாட்டத்தில் மீண்டும் பிரகாசிக்கத் தவறினர். 4ஆவது விக்கெட் வீழ்ந்தபோது இலங்கை 27 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

ஆனால், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சரித் அசலன்கவும் ஏஞ்சலோ மெத்யூஸும் 5ஆவது விக்கெட்டில் 79 பந்துகளில் 118 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

சரித் அசலன்க 39 பந்துகளில் 5 பவுண்டறிகள். 3 சிக்ஸ்களுடன் 69 ஓட்டங்களைக் குவித்தார்.

ஏஞ்சலோ மெத்யூஸ் 51 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 66 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

தசுன் ஷானக்க வேகமாக ஓட்டம் பெற விளைந்து 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஒரு பந்தை எதிர்கொண்ட அணித் தலைவர் வனிந்து ஹசரங்க ஓட்டம் பெறவில்லை.
பந்துவீச்சில் லூக் ஜொங்வே 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ளெசிங் முஸராபனி 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: லூக் ஜொங்வே.

Hot Topics

Related Articles