உலகம்

துல்லியமான பந்துவீச்சாலும் நிதானமான துடுப்பாட்டத்தாலும் ஆஸியை வென்றது இந்தியா

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை, சேப்பாக்கம், எம். சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 விக்கெட்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 200 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 41.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சுகள், விராத் கோஹ்லி, கே. எல். ராகுல் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், அவர்கள் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 165 ஓட்டங் கள் என்பன இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

விறுவிறுப்போ பரபரப்போ இன்றி மந்த கதியில் ஓட்டங்கள் பெறப்பட்டதும் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதுமான இப் போட்டியில் விராத் கோஹ்லி, கே.எல். ராகுல் ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் டெஸ்ட் போட்டி விளையாடும் பாணியில் துடுப்பெடுத்தாடி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இந்தியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது அதன் ஆரம்பம் மிகவும் மோசமாக இருந்தது. முதல் 3 துடுப்பாட்ட வீரர்களும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர். (2 – 3 விக்.

இஷான் கிஷான் எதிர்கொண்ட 1ஆவது பந்திலும் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா எதிர்கொண்ட 6ஆவது பந்திலும் ஷ்ரேயாஸ் ஐயர் எதிர்கொண்ட 3ஆவது பந்திலும் ஆட்டம் இழந்தது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

அவர்கள் மூவரும் ஆட்டம் இழந்தபோது இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 2 உதிரிகளாக இருந்தது.

எனினும், குறைவான வெற்றி இலக்கை அடைவதற்கு அவசரப்டத் தேவையில்லை என்பதை உணர்ந்து விராத் கோஹ்லி, கே. எல். ராகுல் ஆகிய இருவரும் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடினர்.

விராத் கோஹ்லி 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கொடுத்த சற்று இலகுவான பிடியை மிச்செல் மார்ஷ் தவறவிட்டது அவுஸ்திரேலியாவுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. அப்போது இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 20 ஓட்டங்களாக இருந்தது.

அதன் பின்னர் கோஹ்லியும் ராகுலும் எதிரணிக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்காமல் 4ஆவது விக்கெட்டில் 215 பந்துகளில் 165 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

விராத் கோஹ்லி 116 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகளுடன் 85 ஓட்டங்களைப் பெற்றார்.

ராகுல் 115 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 97 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவர் 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இந்தியாவின் வெற்றிக்கு மேலும் 5 ஓட்டங்கள் தெவைப்பட்டது.

அப்போது ராகுல் ஒரு பவுண்டறியும் ஒரு சிக்ஸும் அடித்தால் அவருக்கு சதம் குவிக்க வாய்ப்பிருந்தது.

ஆனால், அவர் பவுண்டறி அடிக்க முற்பட்டு அது சிக்ஸாக அமைந்ததால் இந்தியாவின் வெற்றி உறுதியாயிற்று, அவரது கணிப்பு தவறியதால் சற்று மனம் நொந்துபோன ராகுல், இந்தியாவின் வெற்றியையிட்டு திருப்தி அடைந்தார்.

ஹார்திக் பாண்டியா களம் புகுந்த பின்னர் 40ஆவது ஓவரிலேயே இந்தியா சார்பாக முதலாவது சிக்ஸ் விளாசப்பட்டது.

ஹார்திக் பாண்டியா 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர் சிக்ஸ் அடிக்காமல் விட்டுக்கொடுத்திருந்தால் ராகுலுக்கு சதம் குவிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.

பந்துவீச்சிலி; ஜொஷ் ஹேஸ்ல்வூட் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
போட்டியின் 3ஆவது ஓவரில் மிச்செல் மார்ஷ் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

எவ்வாறாயினும் அனுபவசாலிகளும் பெரும்பாலும் கடைசி உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடுபவர்களுமான டேவிட் வோர்னர், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் பொறுமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

டேவிட் வோர்னர் 41 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார். இதனிடையே உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் குறைந்த போட்டிகளில் 1000 ஓட்டங்களை டேவிட் வோர்னர் பூர்த்தி செய்தார்.

2015இல் உலகக் கிண்ணப் போட்டியில் அறிமுகமான டேவிட் வோர்னர் 19 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார்.

இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், ஏ. பி. டி வில்லியர்ஸ் ஆகிய இருவரும் 20 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களை நிறைவு செய்திருந்தனர்.

மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களாக இருந்தபோது ஸ்டீவன் ஸ்மித் 46 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதன் பின்னர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த மானுஸ் லபுஷேனும் (27), அவரைத் தொடர்ந்து அலெக்ஸ் கேரியும் (0) ஒரே ஓவரில் களம் விட்டகன்றனர். (119 – 5)

மொத்த எண்ணிக்கை 140 ஓட்டங்களாக இருந்தபோது க்ளென் மெக்ஸ்வெல் (15), கெமரன் க்றீன் (8) ஆகிய இருவரும் 3 பந்துகள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

மத்திய வரிசையில் அணித் தலைவர் பெட் கமின்ஸ் 15 ஓட்டங்களையும் பின்வரிசையில் மிச்செல் ஸ்டார்க் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மொஹமத் சிராஜ், ஹார்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: கே.எல். ராகுல்.

Hot Topics

Related Articles