கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச முதலீட்டாளர்களுக்கான வாய்ப்பு குறித்து இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் உரை

கொழும்பு துறைமுக நகரத்தின் ஐக்கிய அரபு இராச்சிய ஊக்குவிப்பு நிகழ்வில் சர்வதேச முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் ஊக்கச் சலுகைகளை வெளியிடும் நிகழ்ச்சியில் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் உரையாற்றவுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம் (PCC) ஆனது சர்வதேச முதலீட்டாளர்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் ஊக்கச் சலுகைகள் குறித்து அறிவூட்டுவதற்காக, ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஊக்குவிப்பு நிகழ்வொன்றை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு ஒரு முக்கிய உலகளாவிய சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தின் ஆரம்பமாக அமைந்துள்ளதுடன், கொழும்பு துறைமுக நகரத்தில் கிடைக்கும் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை ஆராய உலகம் முழுவதிலுமிருந்து முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியம், இந்திய-பசிபிக் பிராந்தியத்திற்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் இந்த புதிய போக்கு அதிகரிக்கும் வேகத்தின் பின்னணியில் இலங்கையின் வகிபாகம் குறித்து மூடிய கதவுகளுக்கு பின்னால் இடம்பெறவுள்ள பிரத்தியேகமான அமர்வில் ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் உரையாற்றவுள்ளார்.

இந்திய-பசிபிக் பிராந்தியம் உட்பட பல கூட்டாளர்களுடன் ஒரே நேரத்தில் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சர்வதேச செயல்பாட்டாளராக ஐக்கிய அரபு இராச்சியத்தின் வகிபாகத்தை இந்த கலந்துரையாடல் வெளிப்படுத்தும்.

2040 ஆம் ஆண்டளவில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக ஆசியாவே பிரதிநிதித்துவப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதுடன், 21 ஆம் நூற்றாண்டின் புதிய பொருளாதார உலகளாவிய வலு மையமாக ஆசியா வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.

இதன் பின்னணியில், ஐக்கிய அரபு இராச்சியமானது இந்திய-பசிபிக் பிராந்தியத்துடனான தனது தொடர்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், இலங்கை அதன் வர்த்தக மற்றும் முதலீட்டு சலுகைகளுடன், குறிப்பாக செயல்படவிருக்கும் பல பில்லியன் டொலர் மதிப்பு மிக்க கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இந்த கூட்டாண்மையில் முக்கிய பங்கை வகிக்கும்.

கொழும்பு துறைமுக நகரம் என்பது இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக தோற்றத்திற்கு மீள்வரைவிலக்கணம் வகுப்பதை நோக்கமாகக் கொண்ட, தொலைநோக்கு இலக்குடன் கூடிய வெளிநாட்டு நேரடி நிதியுதவியுடன் கூடிய கலப்பு அபிவிருத்தித் திட்டமாகும்.

இலங்கையின் தலைநகரான கொழும்பின் மையப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில், கடலிலிருந்து மீளப்பெறப்பட்ட நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட PCC, ஒரு பெருநகரம் சார்ந்த வாழ்க்கை முறையுடனான, உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட மற்றும் நிலைபேண்தகு வாழ்க்கை முறைக்கான வாய்ப்பினை வழங்கும்.

ஒரு விசேட பொருளாதார வலயமாக (SEZ), இது வணிகங்களுக்கு பலவிதமான ஊக்குவிப்புச் சலுகைகளையும், வரப்பிரசாதங்களையும் வழங்குவதுடன், இது சர்வதேச வணிகங்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் தொழிற்பாட்டாளர்களுக்கு இலங்கையில் தங்கள் இருப்பை நிலைநிறுத்துவதற்கான சிறந்ததொரு இடமாக அமைகிறது.

SEZ இன் சுயாதீனமான ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பானது, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் (CPCEC) மூலம் முன்னெடுக்கப்படுவதுடன், பிராந்தியத்தில் வணிகம் செய்வதற்கான எளிதான இடங்களில் ஒன்றாக PCC மாறுவதற்கும், தெற்காசியாவுக்கான நுழைவாயிலாக அதன் வாய்ப்புகளை மேலும் உறுதிப்படுத்தவும் இது உதவுகிறது.

கொழும்பு துறைமுக நகரத்தின் ஐக்கிய அரபு இராச்சிய ஊக்குவிப்பு நிகழ்வு, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (CPCEC) அண்மையில் அதன் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்கான (BSI) வழிகாட்டுதல்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்று குறிப்பிடத்தக்க சாதனை இலக்கினை எட்டியுள்ளது. உலகளாவிய ரீதியில் போட்டியிடும் திறன் வாய்ந்த விசேட பொருளாதார வலயமாக கொழும்பு துறைமுக நகரத்தை மாற்றுவதற்கான அர்ப்பணிப்பினை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ், தொடர்புடைய சட்டங்களிலிருந்து விலக்குகள், சாதகமான நிறுவன வரி வீதங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மூலதன கொடுப்பனவுகள் உட்பட மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை மற்றும் இரண்டாம் நிலை வணிகங்கள் பலவிதமான சலுகைகளைப் பெறும்.

இந்தச் சலுகைகள் PCC க்குள் வணிகங்கள் செழித்து வளர உகந்ததொரு சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், மேலும் முதலீட்டாளர்கள் மத்தியில் இதற்கான ஈர்ப்பை மேலும் மேம்படுத்துகின்றன.

இந்த ஊக்கத்தொகைகளில் வரிச்சலுகைகள் மற்றும் ஒழுங்குமுறை வழிமுறைகள், தங்குதடையற்ற வணிக நடவடிக்கைகளுக்கு இடமளித்தல் மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச தொழில்முயற்சியாளர்களுக்கு சாதகமான முதலீட்டுச் சூழலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

CPCEC ஆனது தனது முயற்சிகளை தரப்படுத்த சர்வதேச ஆலோசனை நிறுவனங்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளதுடன், கொழும்பு துறைமுக நகரத்தின் ஒழுங்குமுறை கட்டமைப்பானது உலகளாவிய தரத்திற்கு இணையாகவிருப்பதை உறுதி செய்கிறது. இதன் விளைவாக, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை மற்றும் இரண்டாம் நிலை வணிகங்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வெளிப்படையான மற்றும் வணிக நேய சூழல் காணப்படுகிறது.

இதன் பிரகாரம், கொழும்பு துறைமுக நகரம் பல்வேறு நலன்கள் மற்றும் துறைகளை பூர்த்தி செய்யும் பல்வேறு வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது.

வருங்கால முதலீட்டாளர்கள் ஆதன நிர்மாண மேம்பாடு, பிராந்திய வர்த்தகம் மற்றும் மைய செயல்பாடுகள், ஆடம்பரமான குடியிருப்பு மற்றும் சில்லறை வர்த்தக இடங்கள் உள்ளிட்ட மற்றும் பல துறைகளில் கால்பதிக்கலாம். இந்த பரந்த தெரிவுகள் அனைத்து பின்னணிகளையும் கொண்ட முதலீட்டாளர்கள் PCC க்குள் முக்கிய இடத்தைப் பெறுவதை உறுதிசெய்வதுடன், இது ஒரு செழிப்பான மற்றும் பரந்துபட்ட பொருளாதார சூழலை வளர்க்கிறது.

கொழும்பு துறைமுக நகரத்தின் மூலோபாய அமைவிடம் அதன் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்றாகும். “தெற்காசியாவிற்கான நுழைவாயில் என நிலைநிறுத்தப்பட்டுள்ள PCC, பிராந்தியம் முழுவதும் வர்த்தகம், வாணிபம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றுக்கான முக்கிய மையமாக செயல்பட தயாராக உள்ளது. உலகளாவிய சந்தைகளுடனான அதன் இணைப்பு மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு அனுசரணையளிப்பதில் அதன் பங்கு ஆகியவை வலுவான தெற்காசிய சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒரு மூலோபாய அத்திவாரமாக அமைகிறது.

ஐக்கிய அரபு இராச்சிய ஊக்குவிப்பு நிகழ்வு முதலீட்டாளர்களுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவு மற்றும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முதலீட்டாளர் விளக்கக்காட்சிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அமர்வுகள் இடம்பெறுவதுடன், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் மூலோபாயங்கள் பற்றிய ஆழமான கலந்துரையாடல்களுக்கான மேடையை வழங்கும்.

முக்கிய சர்வதேச பேச்சாளர்களின் உரைகள் மற்றும் முதலீட்டுப் போக்குகள் பற்றிய குழுநிலை கலந்துரையாடல்கள் சந்தை இயக்கவியல் மற்றும் PCC க்குள் உள்ள வாய்ப்புகள் பற்றிய விரிவான புரிதலை பங்கேற்பாளர்களுக்கு தெளிவுபடுத்தும்.

ஈடுஇணையற்ற வகையில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகளுக்கு உறுதியளிக்கும் வகையில், இந்த ஊக்குவிப்பு நிகழ்வானது சாத்தியமான முதலீட்டாளர்களை இதனுடன் தொடர்புபட்ட முக்கிய தரப்பினர், தீர்மானம் இயற்றுபவர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களுடன் தொடர்புபடுத்த இடமளிக்கும்.

இந்த ஈடுபாடு, கூட்டு உறவுகளை வளர்க்கும் என்பதுடன், முதலீட்டாளர்களுக்கு PCC இன் விரைவில் செழித்து வளரவுள்ள வணிகச் சூழல் கட்டமைப்பில் வெற்றிபெறத் தேவையான ஆதரவை வழங்கும். ஐக்கிய அரபு இராச்சிய ஊக்குவிப்பு நிகழ்வின் மூலம் PCC அதன் திறனையும், உலகளாவிய பொருளாதார வலு மையமாக உருவெடுப்பதற்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *