உலகம்

தமது உடல்சார் தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் பெண்ணுக்கே உரிமை வழங்கப்பட வேண்டும்

“ எனது பெயர்………. வயது 23, திருமணமாகி இரு வருடங்களாகின்றன. எமது திருமணத்திற்கு முன்னரே நானும் எனது கணவரும் 5 வருடங்களாக காதலித்து வந்தோம். அதன் போது எமக்குள் உடலுறவும் இருந்து வந்தது. இதன் காரணமாக சில வருடங்களுக்கு முன்னர் திருமணத்திற்கு முன்னரே நான் இதனால் கர்ப்பமடைந்தேன்.

 

இது எனது வீட்டவர்களுக்கு தெரிய வந்தவுடன் பெரும் பிரச்சினை ஏற்பட்டது. எமது குடும்பத்தினர் உடனடியாக திருமணம் செய்துகொள்ளும் படி வற்புறுத்த ஆரம்பத்ததுடன் இரு குடும்பத்தினருக்குமிடையில் தகறாறு ஏற்பட்டது. இந்நிலையில் எனது கணவரும் அவசரமாக வெளிநாடு போய்விட்டார்.

ஆகவே திருமணம் செய்துகொள்ள முடியாத நிலைமை. இந்நிலையில் திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமடைந்திருந்தமையினை எமது குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆயினும் நானும் கணவரும் திருமணத்திற்கு முன்னராயினும் குழந்தையை பெற்றுக்கொள்ளவே விரும்பினோம்.

எனினும் குடும்பத்தினரை எதிர்க்க முடியாத நிலையில் கருக்கலைப்பிற்கு வலுக்கட்டாயமாக உடன்பட நேர்ந்தது. எமது குடும்பத்திற்கு மிகவும் தெரிந்ததொரு மருத்துவிச்சி எமது கிராமத்தில் உள்ளார். அவரிடம் என்னை அழைத்து சென்றனர்.

அவரது வீட்டிலுள்ள ஒர் அறையில் வைத்துத்தான் கருக்கலைப்பினை செய்தார். முதலில் மயக்கஊசி ஏற்றப்பட்டது பின்னர் இரு மணித்தியாலமளவில் எனக்கு சுயநினைவு இருக்கவில்லை.

பின்னர் மயக்கம் தெளியும் போது விபரிக்க முடியாததொரு வலியை உணரமுடிந்தது. தொடர்ந்தும் இந்த வலி இருந்ததுடன் கிட்டத்தட்ட 20 நாட்கள் இரத்தப்போக்கும் காணப்பட்டது. இன்னும் அந்த அனுபவத்தினை நினைக்கும் போது ஒருவித பயம் எனக்குள் ஏற்படுகின்றது.”

“எனக்கு வயது 34, இரு பிள்ளைகளின் தாய். பாலர் பாடசாலையொன்றில் ஆசியராக பணியாற்றுகின்றேன். திருமணமாகி ஒரு வருடத்திலேயே முதல் குழந்தை பிறந்துவிட்டது. பெண் குழந்தை. எமது வீட்டில் முதல் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக காணப்பட்டது.

முதலாவதாக பெண் குழந்தை பிறந்ததில் எல்லோருக்கும் ஏமாற்றமே. இக்குழந்தைக்கு 10 மாதமாகும் போது நான் இரண்டாவது தடவையாக கருவுற்றேன்.

இதற்கு எனது கணவர் உட்பட எல்லோரும் தமது எதிர்ப்பை தெரிவித்தனர். உண்மையில் எனக்கோ அல்லது கணவருக்கோ கருத்தரிப்பதை தள்ளிப்போடுவதற்கான பாதுகாப்பு முறைகள் பற்றி தெரியாது.

மருத்துவ ஆலோசனையை பெற முயற்சித்த போதும் எனது கணவர் அதனை கௌரவ குறைவாக நினைத்து மறுத்துவிட்டார். ஆனால் கருவுற்ற பின்னர் அவரும் ஏனையவர்களுடன் இணைந்து வார்த்தைகளால் என்னை காயப்படுத்தியதுடன் இக்கருவினை கலைப்பதற்கும் வற்புறுத்த ஆரம்பித்தனர்.

இதற்கு முதல் குழந்தை பெண் என்பதால் எதிர்காலத்தில் பொருளாதார பிரச்சினை ஏற்படலாம் என காரணமும் சொல்லத் தொடங்கினர்.

மூன்று மாதங்களை நெருங்கிக்கொண்டிருந்த நிலையில் எனது கணவரின் தாயும் சகோதரியும் நாட்டு மருத்துவர் ஒருவர் தந்ததாக கூறி தூள் மருந்தினை தேனுடன் சேர்த்து இரு நாட்களும் எனக்குத் தந்தனர்.

அடுத்த சில தினங்களில் எனக்கு வயிற்றுவலியுடன் இரத்தப்போக்கும் காணப்பட்டது. அதன் பின்னர் எதுவும் பெரிதாக இருக்கவில்லை.

அடுத்த இரு மாதங்களும் மாதவிடாய் வரவில்லை. எனவே அருகிலுள்ள வைத்தியாசலைக்குச்சென்ற போது சிறுநீர் பரிசோதனை செய்து நான் ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தினர்.

வேறு வழியின்றி குழந்தையை பெற்றேன். ஆயினும் எனது இரண்மாவது குழந்தை மூளை வளர்ச்சி இன்றிய நிலையிலேயே பிறந்தது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாடசாலையில் சேர்த்துள்ளோம்.

பொருளாதாரத்தினை நினைத்து கலைக்க நினைத்த நாம் தற்போது பல்வேறு செலவுகளை இவருக்காக செய்கின்றோம். நான் ஆரம்பத்தில் பாவித்த கருக்கலைப்பிற்காக மருந்து அதற்கு காரணமாக இருக்குமோ என்கின்ற குற்றவுணர்வு இன்றும் என்னுள் இருக்கின்றது.”

“ நான் தற்போது கடையொன்றில் பணியாற்றி வருகின்றேன்ரூபவ் வயது 27. எனது தாயார் நான் சிறுவயதாக இருக்கும் போதே குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியனால் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார்.

அதனால் நான் எனது சித்தியுடனே தங்கி படித்துவந்தேன். உயர்தரம் படித்துக்கொண்டிருந்த போது சித்தியின் மகன் (எனக்கு அண்ணன் முறை) என்னை பாலியல்ரீதியாக துன்புறுத்த ஆரம்பித்தார்.

இதனை பல தடவைகள் சித்தியிடமும் தெரிவித்தேன். இவ்வொரு தடவையும் நான் இது குறித்து புகார் செய்யும் போது அவர் என்னை அடித்து துன்புறுத்துவார். அம்மாவிடம் வேறு மாதிரி கதைகளைச்சொல்லி எனக்கு வெளிநபருடன் தொடர்பிருப்பதாகவும் கூறுவார். அம்மாவும் அவருடைய கதைகளைத்தான் நம்பினார்.

அப்பாவும் அம்மா அனுப்பும் பணம் தனது குடிபோதைக்கு தேவையாகவிருந்ததால் இது குறித்து அக்கறை செலுத்தவில்லை. இந்நிலையில் பாலியல்வல்லுற்கு சித்தியின் மகனால் உட்படுத்தப்பட்ட நிலையில் நான் கர்ப்பமடைந்தேன்.

இது வெளியில் தெரிந்தால் தன்னுடைய மகனுக்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால் சித்தி என்னை பாடசாலையிலிருந்து நிறுத்திவிட்டார். அம்மா மற்றும் அயலவர்களிடம் ஒருவரால் ஏமாற்றப்பட்டு கர்ப்பமடைந்து விட்டதாக கூறத்தொடங்கினார்.

அவசர அவசரமாக சித்தியின் மகனும் வேலைக்கென காரணம் கூறி வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். எனக்கு என்னுள் ஏற்பட்டிருந்த உடல்சார் மற்றும் உள மாற்றங்களை இனங்காணும் பக்குவமில்லை.

உடல் உபாதைகள் ஏற்படும் போது சில தடவைகள் தற்கொலைக்கும் முயன்றேன். இக்கருவை இல்லாமலாக்கும் படியும் பல தடவைகள் சித்தியிடம் கெஞ்சினேன். இதனால் உயிராபத்து ஏற்பட்டால் அல்லது வன்முறை என வெளியில் தெரியவந்தால் தனக்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் சித்தி இது குறித்து அக்கறை எடுக்கவில்லை.

வேண்டா வெறுப்பாக என்னுடைய 17 வது வயதின் தொடக்கத்தில குழந்தையை பிரசவித்தேன். எனக்கு இக்குழந்தை உண்டானதில் இருந்தே அதன் மேல் வெறுப்பு ஏற்பட்டிருந்தது. பிறந்த போதும் என்க்கு அதனை பார்க்க பிடிக்கவில்லை. இரு நாட்களின் பின் வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு என்னையும் குழந்தையையும் அழைத்து வந்தனர்.

ஒரு வாரத்தின் பின்னர் தெரிந்தவர்கள் மூலமாக குழந்தையை 25000 ரூயஅp;பா பெற்றுவிட்டு என்னுடைய சித்தி தத்துகொடுத்துவிட்டார்.
என்னுடைய விருப்பத்திற்கு மாறாக பிறந்த அந்தக்குழந்தையிடம் இன்றும் இனம்புரியாத வெறுப்பிருக்கின்றது. அதனைப் போன்றதொரு நிலைமை இனி யாருக்கும் ஏற்படக்கூடாது.”

இது மூவரிடமிருந்து பெறப்பட்ட கதை. இதனைப்போன்று பல நூறு கதைகள் எம் சமூகத்தில் உண்டு. இன்றும் பெண் என்பவள் பேசமுடியாத விடயங்களும் இருப்பதுடன் ஏன் தன்னுடல் குறித்த முடிவுகளை எடுப்பதிலும் கூட பல்வேறுப்பட்ட தடைகள் காணப்படுகின்றன.

அத்தடைகளை உடைத்து கருக்கலைப்பினை சட்டபூர்வமாக்குவதற்காக போராட்டங்களும் இது குறித்த விழிப்புணர்வுகளும் இடம்பெற்று வருகின்றன. இதில் முரண்நகை என்னவென்றால் கருக்கலைப்பினை சட்டபூர்வமாக்குவதற்கு பல்வேறு எதிர்ப்புக்கள காணப்படுகின்ற போதும் இன்றும் பல இடங்களில் பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

தமக்குத்தெரிந்த வகையில் எதையாவது அரைத்து உண்பது நாட்டு மருந்துகளை நாடுவது, எனத்தொடங்கி மருத்துவிச்சிகள் மூலமும் ஊருக்குள் இருக்கின்ற அரை வைத்தியர்களை நாடி முறையற்ற மற்றும் பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்புக்கள் நடைபெறுகின்றன.

இம்முறைகள் மூலம் சிலநேரங்களில் கர்ப்பமடைந்த பெண் மட்டுமன்றி பிறக்கின்ற குழந்தைகளும் பல்வேறுப்பட்ட சிக்கல்களையும் குறைபாட்டுப்பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர். மரணங்களும் சம்பவிப்பதண்டு. சில நேரங்களில் உளவியல் தாக்கம் மற்றும் குற்றவுணர்வு காரணமாக தற்கொலை முயற்சிகளிலும் ரூடவ்டுபடுகின்றனர்.

அடுத்த விடயம் கருக்கலைப்பு குறித்த கற்பிதங்கள். இவை பெரும்பாலும் சமூகத்தினரின் மனப்பாங்குகளில் பல்வேறுப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. அதன் காரணமாக அவமானம் என கருதும் சந்தர்ப்பங்களிலும் சட்டரீதியாக அனுகமுடியாத நிலைமையும் பாதுகாப்பற்ற மற்றும் முறையற்ற கருக்கலைப்பினை நாடுவதற்கு ஏதுவாகின்றன.

அதற்கு என்ன செய்யலாம்?

 பாலியல்கல்வி மற்றும் விழிப்புணர்வுகளை வழங்குதல்

 கர்ப்பத்தினை விரும்பாத சந்தர்ப்பங்களில் கருத்தடை மாத்திரைகள் மற்றும் சாதனங்களை உபயோகித்தல்

 கர்ப்பம் சார் தெரிவினை பெண்ணுக்கு வழங்குதல்

 சட்டபூர்வமான கருக்கலைப்பினை மேற்கொள்வதற்கு தேவையான தேர்வினை பெண்ணுக்கு வழங்குதல்

(கருக்கலைப்பினை சட்டபூர்வமாக்குவதில் என்னவிதமான எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன மற்றும் இது குறித்து ஆர்வலர்களது கருத்து என்பன பற்றி அடுத்த கட்டுரையில்…..)

கேஷாயினி எட்மண்ட்

Hot Topics

Related Articles