உலகம்

இரு மதிப்புமிக்க சர்வதேச விருதுகளை வென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மாலைதீவு சுற்றுலாத் துறையின் பொன்விழாவில் மதிப்புமிக்க ‘ஜனாதிபதி தங்க விருது’ மற்றும் 6 ஆவது தெற்காசிய பயண விருதுகளில் (SATA) ‘விசிட்டர்ஸ் சொய்ஸ் – ஆண்டுக்கான சிறந்த விமான நிறுவனம்’ ஆகிய விருதுகளை வென்றுள்ளது.


அரை நூற்றாண்டு காலமாக மாலைதீவு சுற்றுலாத் துறையில் ஸ்ரீலங்கனின் சிறந்த சேவையை அங்கீகரிக்கும் வகையில் ஜனாதிபதியின் தங்க விருது வழங்கப்பட்ட அதேவேளை, சடா (SATA) வெற்றியாளர்கள் பிராந்திய நடுவர் குழாம் மற்றும் பயணிகளின் ஒன்லைன் (online) வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.

இவ்வெற்றிகள், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிராந்தியத்தில் வர்த்தக விமான சேவையில் ஒரு அதிகார மையமாக அமைந்துள்ளமையை மீண்டுமொரு முறை நிரூபித்துக் காட்டுகின்றன.


சுற்றுலாவுக்கான ஜனாதிபதியின் தங்க விருது, 2022 ஒக்டோபர் 3 ஆம் திகதி நடைபெற்ற மாலைதீவு சுற்றுலாவின் பொன்விழா கொண்டாட்டத்தின்போது வழங்கி வைக்கப்பட்டது.

மாலைதீவில் சுற்றுலாவை விருத்தி செய்வதற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக அங்கீகரிக்கப்பட்ட சில விருது பெறும் நிறுவனங்களில் ஒன்றாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் காணப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் உலகளாவிய விற்பனை மற்றும் விநியோகத் தலைவர் திமுத்து தென்னகோன் (Dimuthu Tennakoon) மாலைதீவு ஜனாதிபதி இப்றாஹிம் மொஹமட் ஸாலிஹ் (Ibrahim Mohamed Solih) அவர்களிடமிருந்து இப்பிரத்தியேக விருதைப் பெற்றுக்கொண்டார்.

தெற்காசிய பயண விருதுகள் 16 க்கும் மேற்பட்ட பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் தெற்காசியா பிராந்தியத்தில் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நட்சத்திர நிறுவனங்களை அங்கீகரிப்பதன் மூலம் தொழில் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


2016 இல் ஆரம்பிக்கப்பட்ட சடா (SATA) நிறுவனமானது இந்தியா, இலங்கை, மாலைதீவுகள், பங்களதேஷ், நேபாளம், மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளிலிருந்து வர்த்தகத்தில் சில மிகப்பெரும் நாமங்களின் பங்களிப்பைக் கவர்ந்திழுப்பதன் மூலம் பல ஆண்டுகளாக சீராக வளர்ந்து வந்துள்ளது.

மாலைதீவின் துணை ஜனாதிபதி கௌரவ பைசல் நசீம் (Faisal Naseem), மாலைதீவு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லா மௌசூம் (Dr. Abdullah Mausoom) மற்றும் சடா (SATA) அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹமீட் (Ismail Hameed) ஆகியோர் 2022 செப்டெம்பர் 29 ஆம் திகதி நடைபெற்ற இவ்வாண்டுக்கான விழாவில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்திய முகாமையாளர் ஜயந்த அபேசிங்க (Jayantha Abeysinghe ) மற்றும் மாலைதீவு முகாமையாளர் பௌஸான் பரீட் (Fawzan Faried) ஆகியோர் பங்கேற்று விமான நிறுவனம் சார்பில் விருதைப் பெற்றுக் கொண்டனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸால் வெற்றிகொள்ளப்பட்ட விருதுகள் இரண்டும் தெற்காசியாவில் விமான சேவையின் வலிமை மற்றும் இஸ்திரத்தன்மைக்கான சான்றாகும்.

விமான நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் உள்ள ஒன்பது நகரங்களுக்கு ஒரு வாரத்திற்கு 90 விமானங்களையும் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு வாராந்தம் தலா ஏழு விமானங்களையும் மற்றும் நேபாளத்திற்கு வாராந்தம் ஐந்து விமானங்களையும் இயக்குகின்றது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பல ஆண்டுகளாக மாலைதீவில் குறிப்பிடத்தக்க இருப்பைப் பேணி வருவதுடன், தற்போது மாலைதீவில் உள்ள மாலே (Male) மற்றும் கேன் தீவு (Gan Island) ஆகிய இரண்டு இடங்களுக்கு விமான சேவை வழங்கும் ஒரேயொரு விமான நிறுவனமாகவும் காணப்படுகின்றது.

இவ்விமான நிறுவனம், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் இருந்துவரும் பயணிகளுக்கு கொழும்பு வழியாக எளிதான இணைப்புகளை வழங்குவதுடன் மாலைதீவுக்கு வாராந்தம் 23 தடவைகள் விமானப் போக்குவரத்தை மேற்கொள்கின்றது, அத்துடன் மிகவும் விரும்பப்படும் விடுமுறை தளமாக தீவு நாட்டை வடிவமைத்து அதன் வெற்றிக்கு முக்கிய பங்கையும் ஆற்றி வருகின்றது.

Hot Topics

Related Articles