உலகம்

‘பெண்கள் அதிகமாக அரசியலில் ஈடுபட வேண்டும்’ – ஹிலாரி கிளிண்டன்

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு போர்ப்ஸ் 30/50 என்ற தலைப்பில் பெண்கள் உச்சி மாநாடு அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த பெண்கள் கலந்துகொண்டு கருத்தரங்கங்களில் பேசி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக அவர் உச்சி மாநாட்டில் பேசும்போது கூறியதாவது:-

கடின உழைப்பு

முறையாக செயல்படும் ஜனநாயகத்துக்கு உலக அளவில் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமாகும். நான் மிக மகிழ்ச்சியாக உள்ளேன். ஏனென்றால் தற்போதுள்ள புதிய பெண்கள் தலைமுறையினர் தங்கள் சொந்த வாழ்க்கையை சிறப்பாக பயன்படுத்தவும், மற்றவர்களுக்கு பங்களிப்பை வழங்கவும், மாற்றத்தை ஏற்படுத்தவும் உறுதியுடன் உள்ளதை நிரூபித்து வருகிறார்கள்.

அரசியலில் பெண்கள் ஈடுபட முக்கியமான திறன்கள் தேவை. கடின உழைப்பு, முன் தயாரிப்பு, உணர்ச்சிமிக்க நுண்ணறிவு போன்றவைகள் இதில் அடங்கும். இதைத்தான் சர்வதேச பெண்கள் தினத்தில் நினைவுபடுத்த வேண்டும் என நினைக்கிறேன்.

ஆதரவாக செயல்படுவேன்

பெண்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் விதத்தில் அவர்களுக்கான கல்வி வாய்ப்பு, சுகாதார வசதிகள், ஏற்றத்தாழ்வுகளுக்கு போன்றவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக அளவில் நிறைய செய்ய வேண்டி உள்ளது. அனைத்து தரப்பிலும் அரசியலில் பெண்களுக்கு அதிக வெளிப்படைத்தன்மை வேண்டும். உலகம் முழுவதும் பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டுமானால் அதிக அளவில் பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். திருமதி கிளிண்டன் மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவாரா? என கேட்கப்பட்டது.

அதற்கு எனது பதில் இல்லை என்றே சொல்வேன். ஆனால் நிச்சயமாக பதவிக்கு போட்டியிடும் பெண்களுக்கு ஆதரவாக செயல்படுவேன்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த உச்சி மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.
– தினமலர்

Hot Topics

Related Articles