உக்ரைனில் உக்கிரம் அடைந்துவரும் போருக்கு மத்தியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தமது நாட்டு பிரஜைகளை பாதுகாப்பாக நாட்டுக்கு திருப்பி அழைத்துச்செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கிய, இந்தியா தாவணகெரே மாவட்டம் பகத்சிங் நகரை சேர்ந்த முகமது ஹபீப் அலி, இந்தியாவின் தேசிய கொடியை பயன்படுத்தி பாதுகாப்பாக கர்நாடகம் திரும்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியிருப்பதாவது,
நான் உக்ரைனில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தேன். உக்ரைனில் போர் தீவிரமடைந்ததும், மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் நான் உள்பட பல மாணவர்கள் தங்கி இருந்தோம். அப்போது அந்த விடுதியில் இந்திய தேசிய கொடியை பறக்க விட்டு இருந்தேன்.
இதற்கு அனுமதி அளித்திருந்தனர். இந்திய தேசிய கொடியால் தான் நான் உயிர் பிழைத்தேன். ஏனெனில் இந்திய தேசிய கொடியை பார்த்ததும் உக்ரைன், ரஷ்யா ராணுவ வீரர்கள் என்னை ஒன்றும் செய்யவில்லை. உரிய பாதுகாப்பு கொடுத்தனர்.
தேசிய கொடியை பயன்படுத்த இந்தியாவை தவிர மற்ற நாட்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் பிற நாட்டு மாணவர்கள் உக்ரைனில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். உக்ரைனில் சிக்கி இருக்கும் என்னை போன்ற பிற மாணவர்களும் பத்திரமாக இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.என்றார்.