பாகிஸ்தானில் இஸ்லாமிய புனித நூலான குரானிலுள்ள பக்கங்களை தீ வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் , கடத்தி செல்லப்பட்டு கிராமமக்களினால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை பொலிஸாரால் வழங்கப்பட்ட ஆதாரங்களின்படி, இறந்தவர் 50 வயதுடைய முஹம்மது முஷ்டாக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவருக்கு மனநல குறைபாடுகள் இருந்ததாகத் தெரிகிறது என்றும் பொலிஸார் கூறினார்.
பஞ்ஜாப் − பானேவால் பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லாகூரில் இவ்வாறு கடத்தப்பட்ட நபர், சுமார் 275 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஒரு இடத்தில் அடித்து கொலை செய்யப்பட்டு மரமொன்றில் தொங்கவிடப்பட்ட நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நபரை காப்பாற்ற முன்வராத பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில், அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
” எவரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அன்னாரது இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றுள்ளன.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தானில், தூக்குத் தண்டனையை நிறைவேற்றக்கூடிய ஒரு குற்றமாக மத நிந்தனை உள்ளது.
டிசம்பரில், கிழக்கு நகரமான சியால்கோட்டில் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்கள் இலங்கையர் ஒருவரை அடித்துக் கொன்று எரித்தனர், இது நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கான் தெரிவித்திருந்தார்.