தென் அமெரிக்க நாடான பெருவின் பிரதமராக ஹெக்டர் வலர் பின்டோ (வயது 63), கடந்த 1ம் திகதி பதவி ஏற்ற நிலையில் தற்போது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அவர் 2016-ம் ஆண்டு குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவரது மனைவியும், மகளும் புகார் அளித்துள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த நாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ மந்திரிசபையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் பிரதமர் ஹெக்டர் வலர் பின்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர், “நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்” என்று கூறியதாக அந்த நாட்டின் வானொலி அறிவித்தது.
அவர் துஷ்பிரயோகம் செய்பவர் என வெளியான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என விளக்கினார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அதிபர் பெட்ரோ காஸ்டிலோவிடம் கையளித்துள்ளார்.
மேலும் தனக்கு எதிராக குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை கூறியவர்கள் மீது அவர் வழக்கு தொடர திட்டமிட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் பிரதமர் ராஜினாமா செய்திருப்பது பெரு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.