உலகம்

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை

பயங்கரவாதத்தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

புத்தளம் மேல் நீதிமன்றம் இவருக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றிடம் பிணை கோருமாறு ஹிஜாஸ் தரப்பினருக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

சிறுபான்மையின உரிமைகள் தொடர்பான சட்டத்தரணியும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலரது சார்பில் ஆஜராகியவருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உதவியமை மற்றும் இன, மத சமூகங்களுக்கு இடையில் அமைதியின்மையையும் குழப்பத்தையும் தோற்றுவிக்கக் கூடியவாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இன, மத சமூகங்களுக்கு இடையில் அமைதியின்மையைத் தோற்றுவித்ததாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராகப் பயங்கரவாதத்தடை சட்டத்தின்கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles