இசையை மட்டுமே காதலித்த இந்திய பிரபல பாடகி, லதா மங்கேஷ்கர், தனது 92வது வயதில் காலமானார்.
அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 11ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
சமீபத்தில் அவரின் உடல் நிலை தேரியுள்ளதாக மருந்துவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
எனினும் திடீரென நேற்று அவரது உடல் நிலைமை மிக மோசமடைந்து இருந்ததாகவும், அவருக்கு உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் இன்று காலையில் சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நைட்டிங்கேலாக கருதப்படும் லதா மங்கேஷ்கர் 1929ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பிறந்தார்.
லதா மங்கேஷ்கர் தனது தந்தையிடம் இளம் வயதிலேயே இசை கற்றுக்கொண்டார். கடந்த 1942ம் ஆண்டு முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார்.
1942 முதல் சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், அனில் பிஸ்வாஸ், முதல் ஏ.ஆர் ரஹ்மான், இளையராஜா வரை கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பளர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.
36 பிராந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடியிருக்கும் லதா மங்கேஷ்கர் திருமணமே செய்து கொள்ளாமல் இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
லதா மங்கேஷ்கர் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஒருபோதும் வெளிப்படையாக கருத்து வெளியிடவில்லை. அவரது தனிப்பட்ட வாழ்க்கை பலரை ஆச்சரியப்படுத்துகிறது, ஏனெனில் அவர் தனது வாழ்நாள் முழுவதும் திருமணமாகாமல் வாழ்ந்தார்.
மங்கேஷ்கரின் வாழ்க்கையின் இறுதி வரை யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டோம் என்ற உறுதிப்பாட்டின் பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
மிக இளம் வயதிலேயே, லதா மங்கேஷ்கர் தனது சகோதர சகோதரிகளை கவனித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் என்று கூறப்படுகிறது.
அவர் அவர்களின் கல்வியை கவனித்து அவர்களின் எதிர்காலத்திற்கு ஆதரவளித்தார். லதா வேலை மற்றும் சகோதரிகளை வளர்ப்பதில் மிகவும் பிஸியாக இருந்ததால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி சிந்திக்க வில்லை எனவும் கூறப்படுகின்றது.
1974-ம் ஆண்டு அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த லதா மங்கேஷ்கருக்கு அவரின் 90வது வயதில் இந்திய மகள் விருதை கொடுத்து மத்திய அரசு கவுரவித்தது.
லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் நிகழ்ச்சி நடத்திய முதல் இந்தியர் லதா மங்கேஷ்க ஆவார்.
லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி கோவிந்த் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட அனைத்து முக்கிய விருதுகளையும் வாங்கிய லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்களும், அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லதா மங்கேஷ்கர் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தாதர் சிவாஜி பார்க்கிற்கு எடுத்துச்செல்லப்படுகிறது.