உலகம்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார் – பிரபலங்கள் இரங்கல்

’தங்கப் பதக்கம்’, ‘பைரவி’ உள்ளிட்டப் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் தனது 82 ஆவது காலமானார்.

1965 ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினி உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்தார்.

ஸ்ரீகாந்த் மறைவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-

“பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். இயக்குநர் ஸ்ரீதர் அவர்களால் திரையுலகில் அறிமுகமாகி பைரவி, தங்கப்பதக்கம் உள்ளிட்ட மறக்கமுடியாத பல திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் அவர்கள் நடித்துள்ளார். கதாநாயகனாக மட்டுமின்றி அனைத்து வகையான பாத்திரங்களிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞராக அவர் திகழ்ந்துள்ளார்.

எங்கள் இல்லத்தின் அருகே வசித்தவர் என்பதால் தனிப்பட்ட முறையிலும் அவரை நான் நன்கு அறிவேன். பலமுறை அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பினையும் பெற்றுள்ளேன். திரு. ஸ்ரீகாந்த் அவர்களை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழ்த் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

ஸ்ரீகாந்த் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் முதல் படமான பைரவி படத்தில் முதன்மையான எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஸ்ரீகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles