உலகம்

பாடும் நிலா மறைந்து இன்றோடு ஓராண்டு – நீங்காத நினைவுகளுடன் அஞ்சலி!

இன்று பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்த்து ஓராண்டு ஆகிவிட்டதையொட்டி ரசிகர்கள் மற்றும், திரையுலக பிரபலங்கள் அவரது புகைப்படங்களை பதிவிட்டு நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

அவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பல்லாயிரம் ரசிகர்களின் கண்ணீருடன் இந்த உலகில் இருந்து விடைபெற்றிருந்தார். எனினும் அவரின் குரல் இன்றும் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இசையே.

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் 1966ஆம் ஆண்டு ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் 1969-ல் சுசிலாவுடன் இணைந்து, ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ என்ற பாடலை பாடியதன் மூலம் அறிமுகமானார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என்பது ஒரு பெயர் மட்டுமல்ல. ஒரு உருவம் மட்டுமல்ல ,ஈடு இணையில்லாத ஒரு தெய்வீகக் குரல். நெஞ்சில் என்றும் மறையாத ஒரு அடையாளம்.

உருவங்கள் மறையலாம் ஆனால் ஓராண்டுக்கு முன்பு வரை அவர் அளித்த இசையும் குரலும் உச்சரிப்பும் உலக மனங்களில் இருந்து என்றுமே மறையாது.

1997இல் ரஹ்மான் இசையில் வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் எஸ்பிபி பாடிய ‘தங்கத் தாமரை மகளே’ பாடலுக்குத்தான் அவருக்கு தமிழில் முதல் தேசிய விருது கிடைத்தது (அதற்கு முன்பு மற்ற மொழிப் பாடல்களுக்கு தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். மொத்தமாக ஆறு தேசிய விருதுகளை வென்றிருக்கிறார் எஸ்பிபி).

எஸ்பிபி தேசிய அளவில் புகழ்பெற்ற பாடகராகி பல ஆண்டுகளுக்குப் பின் திரைத்துறையில் அடியெடுத்து வைத்த இசையமைப்பாளர்களும் எஸ்பிபியுடன் பணியாற்ற விரும்பினார்கள். அவரைப் பாட வைத்தால் அந்தப் பாடல் வெற்றியடைவதற்கான சாத்தியம் அதிகம் என்று நம்பினார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானும் அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான தேவாவும் தாம் இசையமைத்த முதல் திரைப்படத்திலிருந்தே எஸ்பிபியைப் பயன்படுத்தினர். தேவாவின் ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் ‘தண்ணி குடமெடுத்து’ என்னும் பாடல் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

இவருக்கு இந்திய அரசு கடந்த 2001- ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கி சிறப்பித்தது.

40,000-ற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் 6 முறை பெற்றிருக்கிறார். இதுவரை தேசிய விருதினை 4மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்பிபி ஒருவரே.

Hot Topics

Related Articles