உலகம்

நீராவி ரயிலை சேவையில் ஈடுபடுத்த இலங்கை திட்டம்!

நீராவி மூலம் இயங்கும் ரயிலை கோட்டை – அம்பேபுஸ்ஸ ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையே சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

இலங்கையில் 1864 இல் கொழும்பு கோட்டையில் இருந்து அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு நாட்டின் முதல் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டதை குறிக்கும் வகையில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

“இலங்கையில் ரயில் சேவைகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பமாகின்றது. முதலாவது ரயில் என்ஜின் 1864 ஜனவரியில் கப்பல் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த கொதிநீராவி என்ஜின் எரிபொருளாக நிலக்கரியைப் பயன்படுத்தியது.
இலங்கையின் முதலாவது ரயில் சேவையைத் தொடங்கி வைக்கும் வகையில் கொழும்பிலிருந்து அம்பேபுஸ்ஸ வரை சென்ற முதலாவது ரயில் வண்டியையும் இந்த என்ஜினே இழுத்துச் சென்றது.
இந்த பயணத்தின்போது பிரதம பொறியியலாளர் மோலிஸ்வேர்த் என்ஜின் சாரதியாகச் செயற்பட்டார்.”

நாட்டுக்குள் வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர சுட்டிக்காட்டினார்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க ரயில் சேவைகளை விரிவுபடுத்துவதே நடைமுறை தீர்வு. எனவே, பிரதான ரயில் பாதையை விரிவுபடுத்துதல் மற்றும் நாட்டிற்கு மின்சார ரயில்களை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பல சிறப்புத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Hot Topics

Related Articles