உலகம்

இலங்கையில் மூன்று அத்தியவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம்!

பால் மா, கோதுமை மா, சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு, தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளது.

இதில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவாலும், சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாவாலும் சமையல் எரிவாயுவின் விலையை 550 ரூபாவினாலும் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி கிடைக்கபெறுமானால் ஒரு கிலோ கிராம் பால் மாவின் விற்பனை விலை 1,145 ரூபாவாகவும் 50 கிலோ கிராம் நிறைகொண்ட சீமெந்து மூடையின் விற்பனை விலை 1,050 ரூபாவாக நிர்ணயிக்கப்படலாம்.

இலங்கையில் ஏற்கனவே அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவிவருவதையடுத்து பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவ்வாறு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமாயின் மக்கள் மேலும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போதே அமைச்சரவையின் அனுமதி கிடைக்க பெற்றால் மாத்திரமே இந்த நடைமுறை செயற்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles