உலகம்

கொழும்பு துறைமுக நகரம் 7 ஆவது ஆண்டு நிறைவை எட்டியுள்ளதுடன் கட்டடங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகவுள்ளன

 

இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப் பிரமாண்டமான மற்றும் மிகவும் இலட்சிய வேட்கை கொண்ட அபிவிருத்திச் செயற்திட்டமான கொழும்பு துறைமுக நகரம், 2014 ஆம் ஆண்டில் ஆரம்ப கட்டமாக கடலிலிருந்து நிலத்தை மீளப் பெறும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அதன் 7 ஆவது ஆண்டு நிறைவை பெருமையுடன் எட்டியுள்ளது.

இந்த காலகட்டத்தில், இந்த செயற்திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் கடலிலிருந்தான நில மீட்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இலங்கைக்கு 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான உத்தரவாதம் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த செயற்திட்டம் அதன் வளர்ச்சிக் கட்டத்தின் போது 25 ஆண்டுகளில் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, China Harbour Engineering Company (CHEC) மற்றும் Browns Investments PLC ஆகியன கொழும்பு துறைமுக நகரத்தின் முதலாவது கட்டட நிர்மாணச் செயற்திட்டமான Colombo International Financial Center (CIFC) இற்கான தமது கூட்டு முயற்சி தொடர்பில் அறிவிப்பினை வெளியிட்டிருந்தன. இதன் முன்னணி பங்காளராக CHEC, அண்மையில் CIFC கலப்பு நிர்மாணச் செயற்திட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு கால அட்டவணையொன்றை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு துறைமுக நகரத்தால் திட்டமிடப்பட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க நிர்மாணச் செயற்திட்டங்களில் இது முதலாவதாக அமையும். China Harbour Engineering Company நிறுவனமும் அதன் பங்காளர்களும் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அபிவிருத்திப் பணிகளைத் தொடங்கும் நோக்கில் இலங்கை அரசாங்கத்துடன் முதலீட்டு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளனர்.

கொழும்பு துறைமுக நகரம் 7 ஆவது ஆண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தை நிறைவேற்றியமை மற்றும் ஆணைக்குழுவின் நியமனம் ஆகியன துறைமுக நகரத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனை இலக்காகும். கடந்த ஏழு ஆண்டுகளில், கொழும்பு துறைமுக நகரம் கொழும்பின் நிலத்தோற்றத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில், கொழும்பு துறைமுக நகரமானது நகரத்தின் முகத்தோற்றத்தை மாற்றியமைப்பதில் ஆவலாக உள்ளதுடன், கொழும்பை உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக நிலைநிறுத்த உதவுகிறது. மேலும், கப்பல் துறை மற்றும் கடற்கரை பகுதிகளை அரச அனுமதியுடன் திறக்க கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரை துறைமுக நகரம் காத்திருக்கிறது.

கொழும்பு துறைமுக நகரம் என்பது தற்போதுள்ள கொழும்பு மத்திய வர்த்தக மாவட்டத்தின் விஸ்தரிப்பாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு புத்தம் புதிய நகர அபிவிருத்தித் திட்டம் என்பதுடன், ஆரம்ப முதலீட்டுத் தொகையான 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டுடன், இது பூர்த்தியடையும் போது மொத்த முதலீடு 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தொகையாக இருக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பு துறைமுக நகர செயற்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக மீட்கப்பட்ட 269 ஹெக்டேயர் நிலம் இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமானது. தொண்ணூற்றி ஒரு ஹெக்டேயர் நிலம் பூங்காக்கள், பசுமையான சாலைகள் போன்ற பொதுவான வசதிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 178 ஹெக்டேயர் A தர அலுவலகம், சில்லறை வியாபார ஸ்தானங்கள், தனித்துவமான குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டங்கள், மருத்துவ வசதிகள், கல்வி வசதிகள், ஒருங்கிணைக்கப்பட்ட உல்லாச விடுதி, சொகுசு கப்பல் துறை, ஹோட்டல்கள் மற்றும் ஏனைய வாழ்க்கைமுறை நிர்மாணச் செயற்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

-முற்றும்

 

Hot Topics

Related Articles