உலகம்

அமானா வங்கி உயிர்காக்கும் வென்டிலேற்றர் கருவிகளை அன்பளிப்பு

 

நாட்டில் மோசமாக பரவி வரும் கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிரான போராட்டத்துக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு உயிர் காக்கும் வென்டிலேற்றர் கருவியை (non-invasive ventilator) அமானா வங்கி அன்பளிப்புச் செய்திருந்தது.

நாட்டில் அதிகளவான கொவிட்-19 தொற்றாளர்கள் பதிவாகும் நிலையில் அவர்களுக்கு அவசியமான சிகிச்சைகளை வழங்குவதற்கு போதியளவு மருத்துவ சாதன வசதிகளை கொண்டிருக்காமல் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள சூழலில் இந்த அன்பளிப்பை அமானா வங்கி மேற்கொண்டுள்ளது.

அமானா வங்கியின் புத்தளம் கிளை முகாமையாளர் அன்வர் சதாத் அவர்களினால் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியர். எச் ஜே எம் ஏ துஷ்யந்த அவர்களிடம் இந்த உயிர் காக்கும் வென்டிலேற்றர் கருவி அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தது.

இந்த உயிர் காக்கும் வென்டிலேற்றர் கருவியைப் பெற்றுக் கொண்டதன் பின் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியர். எச் ஜே எம் ஏ துஷ்யந்த நன்றி தெரிவிக்கும் வகையில் உரையாற்றும் போது, “இந்த கொவிட்-19 தொற்றுப் பரவல் காணப்படும் சூழ்நிலையில் உயிர் காக்கும் மருத்துவ சாதனத்தை எமது வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்திருந்தமைக்காக வங்கிக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த வென்டிலேற்றர் கருவியினூடாக எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தொடர்ந்தும் சிறந்த பராமரிப்பை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

இந்த அன்பளிப்பு தொடர்பான அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “தீவிர சிகிச்சைப் பராமரிப்புக்கான தேவையைக் கொண்டிருக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் சூழலில், சுகாதார பராமரிப்பு கட்டமைப்பு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் கொவிட்-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தனது பங்களிப்பை வழங்க அமானா வங்கி தீர்மானித்தது. முன்களத்தில் அயராது உழைக்கும் சகல தரப்பினருக்கும் நாம் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிராக இலங்கையின் அனைத்து தரப்பினரும் போராடுவதற்கான எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

சமூகத்துக்கு மீள வழங்கும் தனது முயற்சிகளின் அங்கமாக, அமானா வங்கி தொடர்ந்தும் பல சுகாதாரப் பராமரிப்பு செயற்திட்டங்களுக்கு ஆதரவளித்த வண்ணமுள்ளது. இதில் கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியை பராமரிக்கும் பணிகளை 2011 ஆம் ஆண்டு முதல் முன்னெடுப்பதுடன், அரசாங்கத்தின் கொவிட்-19 சுகாதார பராமரிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்துக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பையும் மேற்கொள்கின்றது.

வங்கி தனது முதற்தர சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமான ‘OrphanCare’ஐ முன்னெடுத்து வருவதுடன், அநாதை இல்லங்களைச் சேர்ந்த கைவிடப்பட்ட அநாதரவான சிறுவர்கள் 18 வயதை பூர்த்தி செய்ததும் அவர்களுக்கு குறித்த இல்லங்களிலிருந்து வெளியேறி தமக்கென வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கு அவசியமான நிதியை வழங்கும் வகையில் வைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுவரையில் OrphanCare இல் நாடு முழுவதையும் சேர்ந்த 80க்கும் அதிகமான அநாதை இல்லங்களின் 3000க்கும் அதிகமான அநாதரவான சிறார்கள் காணப்படுகின்றனர். இவர்களுக்கு இதுவரையில் 8 தடவைகள் நிதி வழங்கல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது.

IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2020 ஒக்டோபர் ஃபிட்ச் ரேட்டிஸ் ஸ்ரீ லங்காவினால் வங்கியின் தேசிய நீண்ட கால தரப்படுத்தலான BB+(lka) உறுதியான நிலை என்பதை வழங்கியிருந்தது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

படம்: அமானா வங்கியின் புத்தளம் கிளை முகாமையாளர் அன்வர் சதாத் அவர்கள், புத்தளம் ஆதார வைத்தியசாலையின் மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியர். எச் ஜே எம் ஏ துஷ்யந்த அவர்களிடம் இந்த உயிர் காக்கும் வென்டிலேற்றர் கருவியை அன்பளிப்புச் செய்வதையும், அருகில் வைத்தியசாலை மருத்துவ ஆலோசகர்களான வைத்தியர். சாபித் அன்வர் மற்றும் வைத்தியர் சானக ரத்நாயக்க மற்றும் உதவி கிளை முகாமையாளர் மொஹமட் பாசீல் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

 

Hot Topics

Related Articles