உலகம்

தென்னாபிரிக்க அணியை வீழ்த்திய இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

தென் ஆபிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது.

8 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணிக்கு ஜனாதிபதி டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் வெற்றியீட்டியதன் மூலம் இலங்கை அணிக்கு மற்றுமொரு வெற்றி கிடைத்துள்ளது என ஜனாதிபதி தமது பதிவில் கூறியுள்ளார்.

இலங்கை அணி மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஒரு சிறந்த செயல்திறனுக்கான அர்ப்பணிப்புக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ள அவர் இது எங்களுக்கு பெருமை அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

அத்துடன், வெற்றிக்காக உழைத்த அணி வீரர்கள் மற்றும், பயிற்றுவிப்பாளர்கள் அனைவருக்கும் தமது நன்றியை தெரிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணி 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதற்கமைய, தென் ஆபிரிக்க அணி 204 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெத்தாடியது.

தென்னாபிரிக்க அணி, ஆரம்பம் முதல் இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் 30 ஓவர்களில் 125 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா அணி தோல்வியைத் தழுவியது.

இதேவேளை, இலங்கை அணி, ஐ.சி.சி ஆண்கள் உலகக் கிண்ண சுப்பர் லீக் புள்ளிப் பட்டியலில் ஐந்தவாது இடத்துக்கு முன்னேறியது.

Hot Topics

Related Articles