உலகம்

DFCC வங்கி உள்ளூர் விவசாய வணிகங்களை மேம்படுத்த ‘DFCC விவசாய முயற்சியாண்மை’ கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும், மீளவும் எழுச்சி பெறுவதற்கு இலங்கைக்கு பங்களிப்பதற்கான தனது உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கும் அதன் அடுத்த கட்டமாக, DFCC வங்கி ’DFCC விவசாய முயற்சியாண்மை’ என்ற கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது.

இது உள்ளூர் விவசாயத்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு உதவும் முகமாக பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ’DFCC விவசாய முயற்சியாண்மை’ கடன் திட்டம் ரூபா 100 மில்லியன் தொகை வரையான கடன் வசதிகளை அறிமுகப்படுத்துவதுடன், கடன் வகையின் அடிப்படையில் 5 முதல் 7 ஆண்டுகள் வரை மீளச் செலுத்தப்படக்கூடியது. அத்துடன் சலுகை அடிப்படையில் ஆண்டுக்கு 7% என்ற நிலையான வட்டி வீதத்தில் இது வழங்கப்படுகின்றது.

விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை வலுவூட்டுவதற்கும், தற்போது பரவி வருகின்ற கொவிட்-19 தொற்றுநோயால் அவை முகங்கொடுத்துள்ள இன்னல்களிலிருந்து வெளிவந்து, அதிலிருந்து மீளவும் அவை தொழிற்படும் வகையில் ஒரு வலுவான தளத்தைக் கட்டியெழுப்புவதற்கும் இடமளிப்பதே இக்கடன் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

இந்த திட்டத்தின் கீழ் பயிர்ச்செய்கை (தேயிலை / இறப்பர் / தென்னை / மலர் வளர்ப்பு / சுழற்சி பயிர் செய்கை / இடைப் பயிர்), கால்நடைகள், பாலுற்பத்தி, விவசாய விளைச்சல் பதப்படுத்துதல் (அரிசி அரைத்தல், தானிய பருப்பு பதப்படுத்துதல், பழ வகை மற்றும் காய்கறி வகை பதப்படுத்துதல், உலர்த்துதல் போன்றவை), சேமிப்பு வசதிகள் மற்றும் களஞ்சியசாலைகளை மேம்படுத்தல், வணிகரீதியான பயிர்ச்செய்கை மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாயத்தின் அபிவிருத்தி (சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டுனான பயிர்ச்செய்கை / ஏற்றுமதி விவசாய பயிர்கள், சேதன பயிர்ச்செய்கை / நாற்றுப்பண்ணை / விதை உற்பத்தி, சொட்டு நீர்ப்பாசனம், இழைய வளர்ப்பு போன்றவை) மற்றும் சேதன பசளை உற்பத்தியை அறிமுகப்படுத்துதல் / திறன் மேம்படுத்துதல் ஆகிய தேவைகளுக்காக கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சேதன விவசாயத்தை நோக்கி நாடு மாற்றம் கண்டு வருகின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் சேதனப் பசளை உற்பத்திக்கு உதவ வங்கி உறுதிபூண்டுள்ளது. எனவே சேதன பசளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முயற்சிக்கும் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கடன் உதவியை வழங்குவது இந்த தருணத்தில் மிக முக்கியமானது.

பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதியியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட உள்ளூர் தொழில்துறைகளை மேம்படுத்துவதற்காக இத்தகைய சலுகை கடன் திட்டங்களை அறிமுகப்படுத்துவது மிக முக்கியமானது என்று DFCC வங்கி உறுதியாக நம்புகிறது. மூலதனங்களை திரட்டுவதற்கான வழிமுறைகள் இல்லாமை மற்றும் தேக்கமடைந்த பொருளாதார நிலைமைகள் காரணமாக பாரதூரமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள பணப்புழக்கங்கள் பொருளாதார வளர்ச்சியின் பாதையில் குறிப்பிடத்தக்க முட்டுக்கட்டையாக இருப்பதை நிரூபித்துள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு, உள்ளூர் சனத்தொகையில் கணிசமான சதவீதத்தை உள்ளடக்கிய விவசாயத் துறைக்கு கடன் திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தொழில்துறை உள்ளூர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பகுதியைக் கொண்டுள்ளதுடன், இது சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் முக்கியமான, குறிப்பிடத்தக்க, சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

கல்வியின் அடிப்படையில் பாலின சமத்துவம் எட்டப்பட்டாலும், வேலைவாய்ப்பு, தொழில் முயற்சியாண்மை மற்றும் வணிகத்தை நடத்தும் திறன் ஆகியவற்றில் இது இன்னும் பின்தங்கியுள்ளது என்பதிலும் வங்கி கவனம் செலுத்தியுள்ளது. எனவே, DFCC வங்கி பெண்கள் தலைமையிலான வணிகங்களுக்கும், வேலைவாய்ப்பு அடிப்படையில் பெண்களின் போதிய பங்களிப்பை உள்ளடக்கிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், முகாமைத்துவம் மற்றும் / அல்லது முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் பெண்களையும் உள்வாங்கியுள்ள தொழில் முயற்சிகள் மற்றும் பொருளாதாரரீதியாக பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான மிகவுயர்ந்த குறிக்கோளுடன் ஒவ்வொரு வணிகத்துடனும் தொடர்புடைய பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதில் DFCC வங்கி ஆர்வமாக உள்ளது.

இக்கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. லக்ஷ்மன் சில்வா அவர்கள் கூறுகையில், “எங்கள் புதிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை வலுவூட்டுவதற்கு பங்களிப்பதில் DFCC வங்கி மகிழ்ச்சியடைகிறது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மற்றும் வர்த்தக நிறுவன சந்தைகளில் முக்கிய முன்னுரிமைத் துறைகளில் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம், பொருளாதார வளர்ச்சியை கணிசமாக மேம்படுத்தும் திறனை ’DFCC விவசாய முயற்சியாண்மை’ கடன் திட்டம் கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், பொருளாதார மற்றும் நிதியியல்ரீதியான பாலின சமத்துவம் மற்றும் முன்னுரிமையளிக்கப்படும் துறைகளின் உள்ளடக்கம் ஆகியவற்றை முன்னெடுக்க நாம் முயற்சிக்கிறோம்.

’DFCC விவசாய முயற்சியாண்மை’ கடன் திட்டம் பொருளாதார மீள் எழுச்சி மற்றும் அதன் நிலைபேண்தகமையை நிலைநாட்டுவதற்கான DFCC வங்கியின் பயணத்தின் அடுத்த கட்டமாகும். மேலும் வங்கியின் நீண்டகால அணுகுமுறை மற்றும் மூலோபாயத்தால் ஏற்படக்கூடிய சமூக-பொருளாதார நன்மைகளையும் இது காண்பிக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.

 

Hot Topics

Related Articles