உலகம்

‘என் சாவுக்கு காரணம்’ – இலங்கை சிறுமி ஹிஷாலினியின் அறையில் சிக்கிய முக்கிய சாட்சி!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேளைக்கு அமர்த்தப்பட்ட டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினி மரணம் இலங்கையில் அண்மைாகாலமாக சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான அதிர்வலைகளை அதிகரித்துள்ளது.

சிறுமி ஹிஷாலினி ரிஷாட் வீட்டில் பணியில் இருந்த போது தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற நிலையில் உயிரிழந்திருந்தார்.

விசாரணைகளின் பிரகாரம் தீ பரவல் சம்பவம் கடந்த மாதம் 3ஆம் திகதி காலை 6.45 மணியளவில் பதிவாகியுள்ள போதும் ஹிஷாலினி காலை 8.20 மணியளவிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அனுமதி அட்டை தகவல்கள் கூறுகின்றன.

ரிஷாத் பதியுதீனுடைய மனைவி , மனைவியின் தந்தை, சிறுமியை கொழும்பிற்கு அழைத்து வந்த தரகர் மற்றும் குறித்த வீட்டில் பிரிதொரு பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியமை தொடர்பில் கைது செய்யபட்ட ரிஷாத் பதியுதீனுடைய மனைவியின் சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சந்தேகநபர்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்னர்.

இவரின் மரணம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். சிறுமியின் உடல் இரண்டாவது முறையாகவும் விசேட நிபுணர் குழுவினால் பிரேத பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹிஷாலினியின் மரணம் குறித்த விசாரணைகளுக்கான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரும் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் குழவினரும் இந்த பரிசோதனை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதில் ‘என் சாவுக்கு காரணம்’ என குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எழுத்துக்கள் இரசாயன பகுப்பாய்வு நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

இதனிடையே, நேற்றைய தினம் மாலபே – பிட்டுகல பகுதியில் உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஒருவரிடமும் சிறுமி தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் இதுவரையில் 40 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

Hot Topics

Related Articles