உலகம்

“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் தோற்றலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதில் இருந்து உலகம் பாதுகாப்பு பெற வேண்டுமாயின் முக்கியமாக ஒவ்வொரு நாட்டிலும் வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் குறைந்தபட்சம் 10 சதவீத மக்கள் தொகைக்காவது தடுப்பூசி சென்றடைந்திருக்க வேண்டும்.

ஆண்டிறுதிக்குள் 40 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு மத்திய பகுதிக்குள் 70 சதவீதமாக இந்த எண்ணிக்கை உயர்ந்திருக்க வேண்டும் என அவர் கூறினார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 138-வது அமர்வில் பேசிய உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவரான டெட்ரோஸ் கேப்ரியேசஸ், இதனை தெரிவித்தார்.
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் கண்டுபிடிப்பு மற்றும் உலகம் முழுவதும் அதன் பயன்பாடுகள் மட்டுமின்றி, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் உலகம் மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உள்ளது என இதன் போது தெரிவித்தார்.

இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது, அனைவருக்கும் சமமான அளவுக்கு தடுப்பூசி கிடைக்காதது ஆகும்.

குறிப்பாக குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் வெறும் 1 சதவீத மக்களே குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்கிறார்கள். ஆனால் வளர்ந்த நாடுகளில் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் உட்பட தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசிகள் மற்றும் பிற வழிகளைப் பகிர்ந்து கொள்வதில் தற்போதைய உலகளாவிய அநீதி ‘‘சமூக மற்றும் பொருளாதார கொந்தளிப்புக்கு’’ மட்டுமின்றி, வைரஸ் மேலும் பரவுவதற்கும் வழிவகுக்கிறது என்றார்.

Hot Topics

Related Articles