உலகம்

ஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை!

இலங்கையின் விளையாட்டு துறை வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியின் நடுவராக இலங்கை விளையாட்டு வீராங்கனை டி.நெல்கா ஷிரோமலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள 2020 ஒலிம்பிக் போட்டிகளின் குத்துச் சண்டை போட்டிக்கு இவர் நடுவராக செயல்படுகிறார்.

இலங்கை பொலிஸ் பிரிவின் தலைமை ஆய்வாளர் ஷிரோமலா சர்வதேச அளவில் பல குத்துச்சண்டை போட்டிகளில் இலங்கை பொலிஸ் துறையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் 2000 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது குத்துச்சண்டை பெண்கள் அணியில் ​​ஷிரோமலா இடம் பெற்றிருந்தார்.

இலங்கையின் பெண்களுக்கான நோவீஸ் குத்துச் சண்டை போட்டியில் முதன் முதலாக வெற்றிவாகை சூடிய ஷிரோமலா, 2001 முதல் 2006 வரை தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக பட்டத்தையும் வென்றுள்ளார்.

தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 3 நட்சத்திர முதல் பெண் நடுவர் என்ற பெருமையையும் டி.நெல்கா ஷிரோமலா பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில், ஆசியாவின் சிறந்த குத்துச் சண்டை நடுவராக ஷிரோமலாவுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
டி.நெல்கா ஷிரோமலா, மறைந்த கடற்படை குத்துச் சண்டை சாம்பியன் தம்பு சம்பத்தின் மகள் ஆவார்.

கடந்த மாதம் பாரிஸில் நடந்த ஐரோப்பிய குத்துச் சண்டை ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியில் இவர் நடுவராக செயற்பட்ட போது அவரது தந்தை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles