உலகம்

”இந்திய பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக்கை நாங்கள் கொல்லவில்லை” – தலிபான்கள் மறுப்பு!

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மோதல் உயிரிழந்துள்ள ரோய்ட்டர் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் தமது தாக்குதலில் கொல்லப்படவில்லை என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

புலிஸ்ட்ர் விருது வென்ற இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக், காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான் எல்லையை ஓட்டியுள்ள ஸ்பின் போல்டாக் பகுதியில் நடந்துவரும் தலிபான் ஆப்கானிஜ்தானுக்கு இடையேயான மோதலில் சிக்கி உயிரிழந்தார்.

இதற்கு இந்தியா, ஐ.நா. சபை, ஆப்கானிஸ்தான் அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய பத்திரிக்கையாளரை நாங்கள் கொல்லவில்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறியதாவது:-

இந்திய பத்திரிக்கையாளர் யாருடைய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார் என்பது எங்களுக்கு தெரியாது. அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. அவரது மரணத்துக்கு நாங்கள் வருந்துகிறோம்.

யுத்த பகுதிக்குள் நுழையும் எந்த பத்திரிக்கையாளரும் எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களை நாங்கள் சரியான முறையில் பாதுகாத்து கொள்வோம். பத்திரிக்கையாளர்கள் எங்களுக்கு தெரியாமல் போர் மண்டலத்திற்குள் நுழைகிறார்கள் என்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.

எனினும் ஆப்கான் அரசு படை கமாண்டர் கூறும் போது, ஆப்கானிஸ்தான் சிறப்பு படையினர் ஒரு மார்க்கெட் பகுதியை மீட்டு சண்டையிட்ட போது, தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டதில் டேனிஷ் சித்திக் மற்றும் மூத்த ஆப்கான் அதிகாரி உயிரிழந்தனர் என்றார்.

மும்பையைச் சேர்ந்த டேனிஷ் சித்திக், டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் ஏ.ஜே.கே ரீசர்ச் சென்டரில் மாஸ் கம்யூனிக்கேஷன் பட்டம் பெற்றவர்.

ரோகிங்கியா முஸ்லிம்கள் மியான்மரில் கொல்லப்பட்டதையும், அவர்கள் அகதிகளாக்கப்பட்டு, கடல் கடந்து வங்கதேசம் வந்ததையும் படம் பிடித்தவர் இவரே.


அதில் ஒரு புகைப்படம் உலகப் புகழ்பெற்றது. அகதியாக்கப்பட்டு, ஆதரவற்ற நிலையில் கடல் கடந்து வந்த பெண் ஒருவர், கடல் மண்ணை தொட்டுப் பார்ப்பதுபோல இருக்கும் புகைப்படம்தான் அது.

`இதைத்தான் இந்த உலகுக்குக் காட்ட நினைத்தேன்’ என்று அந்தப் புகைப்படம் பற்றிப் பகிர்ந்திருந்தார் சித்திக். ரோகிங்கியா மக்கள் பட்ட கஷ்டங்களை உலகறியச் செய்த புகைப்படங்களுக்காக, பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான `புலிட்சர்’ விருதைப் பெற்றார்.

Hot Topics

Related Articles