உலகம்

”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன். மக்கள் மன்றம் கலைக்கப்படுகிறது. முன்னர் போல நற்பணி மன்றமாக மட்டுமே செயல்படும்’ என, நடிகர் ரஜினி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினி, கடைசி நேரத்தில் கொரோனா மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி பின்வாங்கினார்.

இதனால், அவர் துவக்கிய மக்கள் மன்றத்தில் இருந்து நிர்வாகிகள் சிலர் வெளியேறி, மற்ற கட்சிகளில் இணைந்தனர்.

இதற்கிடையே, அண்ணாத்த படத்தில் நடித்து வந்த ரஜினி, அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். நேற்று, மன்ற மாவட்ட செயலர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு முன், சென்னை போயஸ் கார்டனில் நேற்று காலை நிருபர்களிடம் பேசிய ரஜினி, ”எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா, இல்லையா போன்ற பல கேள்விகள் உள்ளன. இதற்காக, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடக்கிறது; முடித்து விட்டு சொல்கிறேன்,” என்றார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியலுக்கு வரப்போகிறார் என, அவரது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் உற்சாகம் பிறந்தது.

எனினுமு் சற்று நேரத்தில், ரஜினி தரப்பில் வெளியான அறிக்கை ஏமாற்றத்தை தந்தது.

அதில், அவர் கூறியுள்ளதாவது, நான் அரசியலுக்கு வர முடியவில்லை என சொன்ன பின், ‘ரஜினி மக்கள் மன்றத்தின் பணி மற்றும் நிலை என்ன’ என்று, மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது;

அதை விளக்க வேண்டியது என் கடமை.நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட, ரசிகர் நற்பணி மன்றத்தை, மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும், பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.கால சூழலால், நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை.

வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணமும் எனக்கில்லை.

அதனால், ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு மக்கள் மன்றத்தில் உள்ள செயலர்கள், இணை, துணை செயலர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன், மக்கள் நலப்பணிக்காக, முன்னர் போல ரஜினிரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும்.இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

நாளை, அண்ணாத்த இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ரஜினி, மேற்கு வங்கம் செல்கிறார். நான்கு நாள் படப்பிடிப்பில் பங்கேற்கும் ரஜினி, அதை முடித்து விட்டு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், ஏ.ஜி.எஸ்., தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Hot Topics

Related Articles