உலகம்

இணையவழி கற்பித்தலை நிறுத்தி இலங்கை ஆசிரியர்கள் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அதிகாரிகள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதை எதிர்த்து (இன்று)திங்கட்கிழமை முதல் அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இணையவழி கற்பித்தலில் இருந்து விலகி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சேவைகள் ஒன்றியத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க இந்த அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

இதற்கமைய, இலங்கை ஆசிரியர் சேவைகள் ஒன்றியம் உள்ளிட்ட பதினான்கு தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்துள்ளதாக ஜயசிங்க கூறினார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பாக கொழும்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 33 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 15 பேருக்கு பிணை வழங்கப்பட்டதையடுத்து, முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், இணையவழி கற்பித்தலில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வை கோரியும் இணையவழி கற்பித்தலை தவிர்த்து இலங்கை ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

“தொழிற்சங்கங்களின் அதிகாரிகளை தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவதன் மூலம் அவற்றை அடக்க முடியாது.

ஆசிரியர்கள் தங்கள் சொந்த முயற்சிகளோடு சொந்த வசதிகளைப் பயன்படுத்தி இணையவழி கற்பித்தல் நடைமுறைகளைத் தொடர்கின்றனர்.

‘இணையவழி கற்பித்தல் நடத்தும்போது பல சிக்கல்கள் இருந்தன. பிரச்சினைகள் குறித்து நாங்கள் அரசாங்கத்திற்கு அறிவித்தோம். ஆனால், அந்த பிரச்சினைகளை தீர்க்க இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை’ என இலங்கை ஆசிரியர் சேவைகள் ஒன்றியத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க ஊடகங்களுக்கு ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles