உலகம்

இலங்கை வங்கிகள் சங்கம் ஆற்றல் வாய்ந்த புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘இலங்கையில் வங்கிச்சேவையின் குரலாக’ செயற்பட்டு வருகின்ற இலங்கை வங்கிகள் சங்கம், புதுப்பிக்கப்பட்ட, மற்றும் ஆற்றல் வாய்ந்த புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான பேராசிரியர் டபிள்யூ டி லக்ஷ்மன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஒரு மெய்நிகர் நிகழ்வில் திரை இணைப்பு மூலம் இந்த தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. www.slba.lk என்ற வலைத்தளத்தை இப்போது பொதுமக்களும் அணுக முடியும்.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான பேராசிரியர் டபிள்யூ டி லக்ஷ்மன் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டோர் முன்னிலையில் உரையாற்றுகையில், “இலங்கை வங்கிகள் சங்கம் ஆற்றும் பங்களிப்பு மற்றும் சிந்தனை வழிநடாத்தல் மூலமாக வங்கித் துறையின் கூட்டு முயற்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கை வங்கிச்சேவை மற்றும் நிதித் துறையை உச்சத்திற்கு இட்டுச் செல்வதற்கான நிலைபேண்தகு முயற்சிகள் போன்ற புத்தாக்கங்களை வழிநடாத்தி, நெகிழ்வுத்திறன் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை பேணிப் பாதுகாப்பதில் ஆற்றும் பணியை இலங்கை மத்திய வங்கி இனங்கண்டு உரிய அங்கீகாரம் வழங்குகின்றது.

வங்கிச்சேவை தொழில்துறையில் ஆலோசனையை ஊக்குவிப்பதிலும், மத்திய வங்கி மற்றும் தொடர்புபட்ட ஏனைய தரப்பினருடன் தொடர்ச்சியான கலந்துரையாடலைப் பேணுவதிலும் இலங்கை வங்கிகள் சங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை நாங்கள் போற்றுகிறோம். இது சம்பந்தமாக, இன்று ஆரம்பித்து வைக்கப்படும் வலைத்தளம் இலங்கை வங்கியாளர்கள் சங்கம் மற்றும் வங்கித் துறைக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனை இலக்காக மாறியுள்ளது.

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நிலைபேண்தகு உள்நாட்டு அபிவிருத்திக்கு தீவிரமாக உதவுவதற்காக வங்கித் துறை புத்தாக்கமயப்படல் வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

தேவையான புத்தாக்கங்களில், உள்நாட்டு பொருளாதார / வணிக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் கோணத்தில், வங்கிகளின் தற்போதைய பிணை அடிப்படையிலான கடன் வழங்கல் கலாச்சாரத்தை மறுபரிசீலனை செய்வது மற்றும் வளர்ச்சிக்கு துணைபோகும் செயற்திட்ட அடிப்படையிலான கடன் வழங்கல் சார்ந்த மாற்று வணிகங்களைத் தேடுவது மிகவும் தேவை. இந்த புத்தாக்க செயல்பாட்டில் இலங்கை வங்கிகள் சங்கம் ஒரு தலைமைப் பாத்திரத்தை வகிக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டார்.

இலங்கை வங்கிகள் சங்கத்தின் முக்கிய குறிக்கோள், பொருளாதாரப் பாதுகாப்பினை உறுதி செய்து, நாணய மற்றும் நிதிக் கட்டமைப்பின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் தொழிற்துறை பங்கேற்பாளர்களுக்கும் மற்றும் ஒழுக்காற்றுநர்களுக்கும் ஆதரவளிப்பதன் மூலம், மக்களின் நலனுக்காக செயற்படுவதற்கு வங்கிகளுக்கு உதவுவதாகும்.

புதிய வலைத்தளம் அத்தகைய முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கான ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இலங்கை வங்கிகள் சங்கத்தின் தகவல்களைப் பரப்புவதற்கும், முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் பன்முக பங்குதாரர்களுடன் கலந்துரையாடலை முன்னெடுக்கவும் அதன் திறனை மேம்படுத்துகிறது.

புதிய வலைத்தளத்தின் அறிமுகம் குறித்து இலங்கை வங்கிகள் சங்கத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான லக்ஷ்மன் சில்வா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “புதிய வலைத்தளத்தை தொடங்குவதில் நாங்கள் பெருமிதமும், பெரு மகிழ்ச்சியும் அடைந்துள்ளோம். புதிய தளம் வங்கிச்சேவை தொழில்துறை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரிடையேயும் சிறந்த தகவல்தொடர்பாடல் மற்றும் ஈடுபாட்டை உறுதி செய்வதற்காக நவீனமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மீது நாம் வைத்துள்ள முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது.

இந்த முயற்சி பொது மக்கள் மற்றும் ஆர்வமுள்ள ஏனைய தரப்பினர் அடங்கலாக வங்கித் துறைக்கு வெளியே உள்ளவர்களுக்கும் ஒரு தங்குதடையற்ற தகவல் பகிர்வு செயல்முறைக்கு உதவும். கொவிட் தொற்றுநோய்க்குப் பின்னரான ‘புதிய இயல்புக்கு’ ஏற்ப டிஜிட்டல் மயமாக்கல் ஒரு முக்கிய பங்கினைக் கொண்டுள்ளதால், சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஈடுபாட்டில் டிஜிட்டல் வளர்ச்சி மாற்றத்திற்கும், வங்கித் துறையின் பல்வேறு அம்சங்கள் மற்றும் செயல்பாட்டுப் பகுதிகள் முழுவதும் தகவல்களைப் பகிர்வதற்கும் பங்களிப்பதில் இலங்கை வங்கிகள் சங்கம் மகிழ்ச்சியடைகிறது. டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் வங்கிச்சேவை இப்போது ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துப் பயணிப்பதுடன், இந்த புதிய இயல்பில் நாம் முகங்கொடுக்கும் பன்முக சவால்களை எதிர்கொள்ள வங்கித் துறைக்கு இந்த மார்க்கம் மிகவும் முக்கியமானது,” என்று குறிப்பிட்டார்.

இலங்கையிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஏனைய பல அதிகார எல்லைகளுக்குள்ளும் இயங்கி வருகின்ற 30 க்கும் மேற்பட்ட உறுப்பு வங்கிகளுடன், இலங்கை வங்கித் துறைக்கான ஒரு தொழிற்துறைச் சங்கமே இலங்கை வங்கிகள் சங்கமாகும். இலங்கை வங்கிகள் சங்கமானது 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலங்கையில் உள்ளிணைப்புச் செய்யப்பட்ட ஒரு நிறுவனமாகும். இலங்கை வங்கிகள் சங்கத்தில் தற்போது அனுமதி உரிமம் பெற்ற வணிக வங்கிகள் 24 உம், அனுமதி உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள் 6 உம் அங்கத்துவம் வகிக்கின்றன.

 

இலங்கை வங்கிகள் சங்கத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான திரு லக்ஷ்மன் சில்வா அவர்கள் வலைத்தள வெளியீட்டு விழாவில் இணைய வழியாக உரையாற்றும் காட்சி

Hot Topics

Related Articles