உலகம்

கனடாவின் மேற்கு பகுதியில் நிலவும் உயர் வெப்பநிலை காரணமாக 130 பேர் பலி!

கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிலவும் அதிக வெப்பம் காரணமாக 130 பேர் உயிரிழந்ததாக பிரிட்டிஷ் கொலம்பியா போலிசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வான்கூவர் நகரில் மட்டும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இப்போது வரை 65 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் தலைநகர் விக்டோரியாவிலிருந்து 155 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லிட்டன் என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

வரலாறு காணாத இந்த வெப்பம் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் கடுமையான பாதிப்பை எதிர் கொண்டுள்ளனர்.

மக்கள் முடிந்தவரை வெளியில் வருவதை தவிர்க்கவும், குளிர்சாதன அறைகளில் இருக்கவும், அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே கனடா வானிலை மையம் பிரிட்டிஷ் கொலம்பியா மட்டும் இன்றி சஸ்காட்செவன், மனிடோபா உள்ளிட்ட மாகாணங்களிலும் வடமேற்கு பிராந்தியங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவும் என்று எச்சரித்துள்ளது.

இதனிடையே கனடாவை போல் அமெரிக்காவின் வடமேற்கு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் போர்ட்லாந்து மற்றும் சியாட்டில் ஆகிய நகரங்கள் 1940 களுக்கு பிறகு அதிக வெப்பநிலையை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

போர்ட்லாந்தில் 46.1 செல்சியஸ் டிகிரியும் சியாட்டிலில் 42.2 செல்சியஸ் டிகிரியும் வெப்பம் பதிவானதாக அமெரிக்க வானிலை மையம் கூறியுள்ளது

Hot Topics

Related Articles