உலகம்

அவுஸ்ரேலியாவில் நிர்கதியாகியுள்ள இலங்கை ஏதிலிகள் வழக்கில் புதிய திருப்பம்!

அவுஸ்ரேலியாவில் நிர்கதியாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த நடேசன் – பிரியா தம்பதிக்கு அந்நாட்டின் இணைப்பு வீசா வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹவ்க் அறிவித்துள்ளார்.

பொதுநலன் அடிப்படையில் அமைச்சருக்கு தலையிடுவதற்கான அதிகாரத்தை வழங்கியுள்ள புலம்பெயர்வு சட்டத்தின் 195 ஏ பிரிவினை பயன்படுத்தி இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்குச் சென்றனர்.

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லேண்ட் – பிலோயிலா (BILOELA) நகரில் வசித்து வந்த இவர்களின் புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் 2018ம் ஆண்டு இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அதற்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் நிமித்தம் வழக்கு விசாரணை வரையில் கிறிஸ்மஸ் தீவில் உள்ள ஏதிலிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அண்மையில் சுகயீனமடைந்த அவர்களது 3 வயது மகள் தாருணிக்கா மெல்போனில் உள்ள பேர்த் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

3 வயதான தாருணிக்கா மற்றும் 6 வயதான கோபிகா ஆகியோர் நினைவு தெரிந்த நாள் முதல் கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமிலேயே வசித்து வருகின்றனர்.

உரிய சூரிய வெப்பம் கிடைக்கப்பெறாமை காரணமாக விட்டமின் டி குறைபாடு உள்ளிட்ட பல நோய்களால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த சிறுமி அடங்கலான குடும்பத்தினரை விடுவிக்கக் கோரிய அழுத்தங்கள் வலுப்பெற்றுள்ளன.

இந்நிலையிலேயே தந்தை, தாய் மற்றும் ஆறு வயது கோபிகா ஆகியோருக்கே 3 மாதங்களுக்கு பேர்த் நகரில் தங்கி இருப்பதற்கான பிரிஜிங் இணைப்பு வீசா வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்ணிகா விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளமையினால், அவருக்கு அந்த விசா வழங்கப்படவில்லை இதன் காரணமாக அந்த குடும்பத்தினர் பேர்த்தில் இருந்து வெளியேற முடியாது.

இந்த வீசாவின் மூலம் சுகாதாரம், வீடு, தொழில் வசதிகள் அவர்களுக்கு வழங்கப்படும்.

எனினும் அவர்களது வீசா உரிமை தொடர்பான நிலைப்பாட்டில் இன்னும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அவர்கள் அங்கிருந்த படி வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கடுமையான அகதிகள் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி படகு மூலம் நாட்டுக்குள் வர முற்படுவோரை அகதியாக கருதி அடைக்கலம் வழங்குவதை அந்நாட்டு அரசின் விதிகள் அனுமதிப்பதில்லை.

மேலும், படகு மூலம் ஒரு நாட்டில் இருந்து மக்கள் கடத்தப்பட்டு வரும் வழக்கத்தை நிறுத்தவே இந்த கொள்கை கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு கூறுகிறது.

ஆனால் அரசின் இந்த போக்கு, அகதிகள் உரிமைகளை மீறும் வகையில் இருப்பதாக மனித உரிமைகள் குழுக்கள் விமர்சித்து வருகின்றன.

Hot Topics

Related Articles