உலகம்

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றதாக உலகத்தையே ஏமாற்றிய பெண் – மனநல மருத்துவமனையில் அனுமதி!

இந்த மாத ஆரம்பத்தில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றதாக தென் ஆப்பிரிக்க பெண் ஒருவர் தொடர்பில் செய்திகள் வெளியானது.

எனினும் இவர் பொய் உரைத்துள்ளமை தெரியவந்ததையடுத்து தற் போது இவர் கைது செய்யப்பட்டு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் உள்ள மருத்துவமனையில், கோசியாம் தாமரா சிட்ஹோல், 37, என்ற பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்ததாக சமீபத்தில் செய்தி வெளியானது.

மொத்தம் மூன்று பெண் மற்றும் ஏழு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், நலமுடன் உள்ள குழந்தைகள் மருத்துவ கண்காணிப்புக்காக, ‘இன்குபேட்டரில்’ வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது.

இது உலக சாதனையாக கருதப்பட்டது. ஆனால் இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சில ஊடகங்கள், இதை உண்மை என தெரிவித்தன.

இதில் சந்தேகம் எழுந்ததை அடுத்து போலிஸார் விசாரணை நடத்தினர். குழந்தைகள் பிறந்ததாக கூறப்படும் பிரிட்டோரியா நகர தனியார் மருத்துவமனை, ‘அந்த பெண்ணுக்கு எங்கள் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கவில்லை’ என, கூறியது.

மேலும், அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவரது உடலில் பிரசவத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்பது உறுதியானது.

இதையடுத்து 10 குழந்தைகள் பெற்றதாக கூறிய இந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரை மனநல மருத்துவமனையில் போலிஸார் அனுமதித்து, பரிசோதனைகள் செய்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியை சேர்ந்த ஹலிமா சிஸ் என்ற பெண், மே மாதம் நடந்த பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்தார்.

உலக அளவில் ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகளை பெற்றறெடுத்தவர் என்ற சாதனைப் பட்டியலில், இவர் பெயர் இடம் பெற்றுள்ளது.

Hot Topics

Related Articles