உலகம்

கோயில்கள் பூட்டப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்த மாற்றுமத மக்கள் !

-வீ.பிரியதர்சன்
கொரோனாவினால் மூடப்பட்டுள்ள அந்த இந்து கோயிலால், தனது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார் கிறிஸ்தவர் ஒருவர். மதங்கள் மேல் மதம்கொண்டு அலைக்கின்ற மக்களிடையே மதங்கள் “அன்பையும் சமத்துவத்தையுமே” விதைக்கின்றன என உரத்துச்சொல்கின்றது இவர்களது வாழ்க்கை.

கொழும்பு, முகத்துவரம் காளி – விஷ்ணு கோவில் பகுதியில் பூக்கடை வைத்திருப்பவர் 43 வயதான சம்பத் பெர்னாண்டோ. சிங்கள மொழிபேசும் இவர் கிறிஸ்தவ மதத்தை தழுவுபவர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சம்பத் பெர்னாண்டோ 1997 இல் இருந்து இந்த இந்துக் கோயிலுக்கு பூமாலை, அர்ச்சனைத்தட்டு விற்கும் கடையை நடத்தி வருகிறார். அவரது தந்தையாரால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக்கடையை இவர் தொடர்ந்த நடத்தி வருவதாக கூறுகிறார்.

அவரது கடையில் மூன்றுபேர் வேலைசெய்கிறார்கள். இந்த தொழிலுக்கு அவர் எப்படி வந்தார் ?
“ நாங்கள் கத்தோலிக்கர்கள். இந்தக் கோயிலுக்கு அருகில் தான் எங்கள் வீடு என்பதால் எங்களுக்கு சிறு வயதிலிருந்தே இந்தக் கோயிலைப்பற்றி தெரியும். கோவிலுக்குள்ளும் விகாரைகளுக்குள்ளும் நாம் சாதாரணமாக சென்றுவருவோம். அங்கு நடக்கும் விடயங்களை கவனிப்போம். புத்த பெருமானுக்கு பூஜை நடத்துவதையும் அவதானித்திருக்கிறேன். இந்துக் கோவில் விசேடங்களையும் பார்த்திருக்கிறேன்.

கோவில்களிலும் விகாரைகளிலும் எப்படியான பூக்களை வைத்து பூஜை சென்கின்றார்கள் என்பதையும் அவதானித்து இருக்கின்றேன். இவைதான் இந்த தொழிலுக்கு மூலதனம். எனது தந்தையாரிடம் இருந்தும் இந்துக்களின் வழிபாட்டு முறைகள் பற்றி தெரிந்துகொண்டேன்.” என்று கூறும் சம்பத் பெர்னாண்டோ. தனது தந்தையாரின் காலம் பற்றி நினைவுகூர்ந்தார்.

“1960 ஆம் ஆண்டு போல எனது தந்தையே அந்த இடத்தில் முதலாவதாக கடையொன்றை ஆரம்பித்தார். அப்பொழுது, இந்த இடம் காடாகவே இருந்தது. காட்டுக்குள்ளேயே ஒரு சிறிய கோயிலாக இது காணப்பட்டது.

கோயிலுக்கு பக்தர்கள் வருவதும் குறைவு. கிணற்றுக்கு குளிக்க செல்பவர்கள் அப்படியே கோயிலுக்கும் வந்து செல்வார்கள். இந்தப் பக்கத்தில் கிறிஸ்தவர்கள்தான் அதிகம் இருந்தனர். யுத்தக்காலத்திலேயே அநேக தமிழர்கள் இங்கு வந்து செல்லத் தொடங்கினர். இப்போது அதிகளவான மக்கள் குடியேறியுள்ளனர்.” என்கிறார்.

முகத்துவாரம் கடலை அண்டிய பிரதேசம். இங்கே அதிகளவான கிறிஸ்தவ தேவாலயங்களும் உள்ளன. அதேநேரம் கடலைப் பார்த்தபடி பெரிய கோபுரத்துடன் இந்த விஷ்ணு கோயிலும் அருகே காளி கோயிலும் அமைந்துள்ளது.

கோயிலுக்கு தேவையான பூசைப்பொருட்கள் அனைத்தும் கோயிலின் முன்னுள்ள கடைகளில் கிடைக்கின்றன. இங்கே எறத்தாழ முப்பது கடைகள் உள்ளன. அதிகமான கடைகளுக்கு சொந்தக்காரர்கள் கிறிஸ்தவர்களாகவோ, பௌத்தர்களாகவோ தான் இருக்கின்றார்கள்.

தமது மதத்தைத் தவிர ஏனைய மத வழிபாட்டு இடங்களுக்கு போவதோ அவைபற்றி கதைப்பதோ, தெரிந்து கொள்வதோ பவமான காரியம் என எண்ணும் பலர் இருக்கும் இந்த சமூகத்தில்தான் இவர்களும் வாழ்கிறார்கள்.

சம்பத் பெர்னாண்டோ போன்ற பலர் இந்துக்கோயிலுக்கு என்ன தேவை என்பதை அறிந்து விற்பனை செய்து வருகிறார்கள். அவர் தனது கடையில் வேலைக்காக வைத்திருக்கும் மூவரில் ஒருவர் தமிழர். ஏனைய இருவரும் சிங்கள பௌத்தர்கள்.

அதே போல் ஒவ்வொரு கடையிலும் குறைந்தது இரண்டுபேர் வேலைக்கு நிற்பதாக கூறுகிறார். இங்குள்ள கடைகளுக்கு புத்தளத்தில் இருந்தும் தியத்தலாவையில் இருந்தும் பூக்கள் கொண்டுவரப்படுகிறன. இந்த பூக்களைக் கொண்டு வருபவர்களில் இஸ்லாமியர்களும் பௌத்தர்களும்கூட சம்பந்தப்பட்டிருக்கலாம்.

இந்துக்களைப் பொறுத்தவரை கோயிலுக்கு செல்லும்போது சுத்தமாக குளித்து மச்சம் மாமிசம் உண்ணாது செல்வதை வழக்காகக் கொண்டுள்ளனர். அதேபோல் பூக்களையும் பூசைப்பொருட்களையும் பெறும் இடங்களும் அவ்வாறே இருக்கவேண்டும் எனவும் விரும்பவர். அது பற்றி சம்பத் பெர்னாண்டோவிடம் கேட்டபோது,


“இங்குள்ள வியாபாரியகளில் அநேகர் கத்தோலிக்கர்கர்கள் அவர்கள் தேவாலயத்திற்கும் செல்வார்கள். அதேபோன்று மற்ற மதத்தையும் மதிப்பார்கள்தான். ஆனால் இந்த விடயம் பற்றி நான் குறிப்பிட்டு எதுவும் சொல்லமுடியாது.

ஆனாலும் செவ்வாய்ரூபவ் வெள்ளி போன்ற நாட்களிலும் இந்த நடைமுறைகளை ஓரளவிற்கு கடைப்பிடிக்கிறோம். கோயில் வேலைகளை செய்யும்போது முடிந்தளவு நாங்கள் மச்ச, மாமிச உணவிலிருந்து விலகியிருக்கவே முயற்சி செய்வோம். ஏனென்றால் நாங்கள் அர்ப்பணிப்புடன் வேலை செய்யவே முயற்சிசெய்கிறோம்.” என்று கூறுகிறார்.

இவ்வாறு பிறமத அனுட்டானங்களை மதித்து அதற்கேற்ப நடக்கும் சம்பத் பெர்னாண்டோ போன்றோர் மத முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்களாவே வாழ்ந்து வருகிறார்கள். சம்பத் பெர்னாண்டோ கிறிஸ்தவ தேவாலய நிர்வாக அங்கத்தவராக இருந்து தேவாலய வேலைகளையும் செய்துவருகிறார்.

சம்பத்தின் தந்தை கத்தோலிக்கர். தாய் பௌத்தர். இவ்வாறு குடும்பத்தில் ஏற்பட்ட மத இணைவு சமூகத்திலும் பிறமதங்களுடன் இயைந்து வாழ அவர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளது போலும்.

கத்தோலிக்கர்கள் அதிகம் உள்ள இடத்தில் அமைந்திருக்கும் இந்த இந்துக்கோயிலின் உள்ளே வழிபாட்டு முறைகள் பற்றியும் தெய்வங்களின் பெயர்களும் சிங்களத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஏனெனில் இந்தக் கோயிலுக்கு வருபவர்களில் அதிகமானோர் சிங்கள மொழி பேசுபவர்களாக உள்ளனர். இதுபற்றி சம்பத் பெர்னாண்டோ குறிப்பிடுகையில்,

“ உண்மையிலேயே இந்தக் கோயிலுக்கு வருபவர்களில் அநேகர் சிங்கள பௌத்தர்களே. இந்து மக்கள் பூஜை நேரங்களில் மட்டுமே வருகைத்தருவார்கள். சிங்களவர்கள் எப்போதும் வருகைத்தந்து குறிப்பாக காளிஅம்மனை வழிபடுவார்கள். வியாபாரம், கல்வி சம்பந்தமாக காளியம்மனுக்கு “நேத்தி” வைத்து வழிபடுகிறார்கள்.

இவர்கள் உண்மையான நம்பிக்கையுடன் ஒவ்வொரு வெள்ளியன்றும் தவறாமல் கோயிலுக்கு வருவார்கள். அவர்களே எமது கடைக்கு பெரும் வாடிக்கையாளர்களாகவும் உள்ளனர். இவர்களில் சிலர் வெள்ளியன்று வரமுடியாவிட்டால் கோயிலுக்கு பூ மாலை போடசொல்வார்கள். அவர்களுக்காக நாமே அதைச்செய்துவிடுவோம்.” என்றார்.

இவ்வாறு கொழும்பு முகத்துவார பகுதியிலுள்ள இந்துக்கோயிலைச் சுற்றி தமது வாழ்வாதாரத்தை உருவாக்கியிருந்த கிறிஸ்தவர்கள் பலர் இன்று வாழ்வாதாரத்தை இழந்து இக்காட்டான சூழலில் உள்ளனர். நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலான பயணத்தடை வெளிநடவடிக்கைகள் எல்லாவற்றையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

வழிபாட்டு இடங்களும் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் கோயிலையும் அங்கு வருபவர்களையும் நம்பி வாழ்க்கையை கொண்டு நடத்திய இவர்கள் மிகவும் இக்கட்டான நிலைகளை சந்திப்பதாக கூறுகின்றனர்.

“கோயில்கள் மூடப்பட்டுள்ளன. எங்கள் வியாபாரம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. நான் நினைத்தேன் 14 ஆம் திகதி திறப்பார்கள் என்று, ஆனால் திறக்கவில்லலை. ஏதோ சமாளித்துக் கொண்டு போகிறோம்.

பயணத்தடை நீடிக்க நீடிக்க மிக கஸ்ரமாகிவிடும். கடையில் வேலை செய்தவர்களுக்கும் இப்பொழுது தொழில் இல்லை. பெரிய அளவில் பணத்தை சேமித்து வைத்திருக்கும் நிலையில் நாம் இருக்கவில்லை.

2019 இல் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பிற்கு பிறகு மக்கள் கூடுவது குறைந்தது. இதனால் கோயில்களுக்கு மக்கள் வருவது குறைந்தது. அதனாலும் நாம் பாதிக்கப்பட்டோம். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வரத்தொடங்க கொரோனா என கொடிய நோய் பரவத்தொடங்கிவிட்டது. அதைக்கட்டுப்படுத்த மக்கள் நடமாட்டத்தை நிறுத்தவேண்டிய தேவையேற்பட்டது.

அரசும் அவ்வாறே செய்கிறது. நோயை கட்டுப்படுத்துவதற்காக போக்குவரத்து கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவது உண்மையாகவே நல்லதுதான். ஆனால் எங்களைப்போன்றவர்களுக்கு வாழ்வை கொண்டு செல்வது கஸ்ரமாக உள்ளது.

என்னிடம் இருந்த வேலையாட்கள் 03 பேரில் இருவர் என்னுடன் தான் தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாவிட்டாலும் உணவு, தேநீர், தண்ணீர் என்பவற்றையாவது கொடுக்க வேண்டும். அவர்களுக்கு சிறு குழந்தைகளும் உண்டு.


அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்பது எனது கடமை. இப்படியே பயணத்தடை தொடர்ந்தால் நான் என்ன செய்ப்போகிறேனோ தெரியாது.” என்று தமது நிலையை எண்ணி வருந்துகிறார் சம்பத் பெர்னாண்டோ.
இவ்வாறானவர்களுக்கு அரசின் 5000 கிடைக்கிறதா?

“5000 ரூபா தருவோம் என கூறினார்கள். அதையும் கொடுக்க வில்லை. கிராம சேவகர் பதிவில் இருப்பதனால் எனக்கு 5000 ரூபா கிடைக்கும். ஆனால் எனது வேலையாட்களும் அவரது மனைவியும் பிள்ளையும் இங்கிருப்பவர்கள் அல்ல. தற்போது என்னுடன் தான் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு அந்த 5000 ரூபா பணம் கிடைப்பதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு இங்கு பதிவு இல்லை. இதன்போது அவர்கள் அசாதாரண நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனக்கு கிடைக்கும் 5000 ரூபா பணத்திலே நான் அவர்களுக்கும் செய்கிறேன்.” என்கிறார் சம்பத் பெர்னாண்டோ.

இதற்காக சம்பத் பெர்னாண்டோ கிராம சேவகரைச் சந்தித்து பேசியுள்ளார். அதன்படி இவர்களையும் இணைத்து பெயர்பட்டியலை கொடுத்ததாக கிராமசேவையாளர் கூறியுள்ளார். ஆனாலும் இன்னும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

இந்த கொரோனா சூழலில் எல்லோரையும் ஒரு இடத்திற்க அழைத்து பணத்தைக் கொடுக்காது, கிராம சேவகரின் பெயர்பட்டியலுக்கு ஏற்ப வீடுவீடாகச் சென்று பணத்தை கொடுக்கலாம். அதுவும் நடைபெறவில்லை. என்பதை வருத்தத்துடன் சொல்கிறார் சம்பத் பெர்னாண்டோ.

மக்கள் ஒருவருக்கொருவர் கொடுத்தும் எடுத்தும் வாழும் இந்த வாழ்வில் மதம் இனம் பின்னிப் பிணைந்துதான் உள்ளது. மத வழிபாட்டிடங்கள் வெறும் நம்பிக்கைக்குரிய வழிபாட்டு இடங்கள் மட்டுமல்ல அதைச்சுற்றி பல்லின மக்களும் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கான செயற்பாடுகளையும் மத வழிபாட்டிடங்கள் கொண்டுள்ளன.

அதைப்புரிந்துகொண்ட இந்த மக்களின் பன்மைத்துவ வாழ்வு சிறக்க வேண்டும். அதற்கு தற்போது அரசுதான் உதவிசெய்யமுடியும்.

Hot Topics

Related Articles