உலகம்

இந்தியாவில் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் 3-வது அலை மோசமான நிலையை ஏற்படுத்தும் – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் மக்கள் கொரோனா கால  விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், 2-வது அலையை விட 3வது அலையின் போது மோசமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘டெல்டா பிளஸ்’ உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் 3ஆவது அலைக்கு அடித்தளமிடுமா என்ற பீதி ஏற்பட்டுள்ளது.

வேகமாக பரவி வரும் இது, தடுப்பூசியால் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி தாக்கும் வல்லமை கொண்டது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் “மக்கள் முக கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின்பற்றாமல், சட்டம் ஒழுங்கை அமல்படுத்துவோர் அவர்களுக்கு அபராதம் விதிக்கவில்லை என்றால், நிச்சயமாக பிரச்சினை ஏற்படும். இரண்டாவது அலையை விட மோசமான நிலை ஏற்படும்” என்று  டெல்லி அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த வைத்தியர் சுரன்ஜித் சாட்டர்ஜி  எச்சரித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம், ஏஒய்.1 எனப்படும் இந்த புதிய உருமாற்ற வகை கொரோனா வைரசை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

இந்த வைரசின் ஸ்பைக் புரதம் கே417என் என்ற உருமாற்ற வகையை சேர்ந்ததாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்பைக் புரதம், மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாண்டி பாதிக்கக் கூடியது என கூறப்படுகின்றது.

இதனால் இன்னும் சில மாதங்களில் 3ஆவது அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

-தினத்தந்தி

Hot Topics

Related Articles