உலகம்

eKYC வசதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஆட்பதிவாளர் திணைக்களத்துடன் அமானா வங்கி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

 

ஆட்பதிவாளர் திணைக்களத்தின் eKYC (Know Your Customer) வசதியை பெற்றுக் கொடுப்பதற்கு அத்திணைக்களத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் அமானா வங்கி கைச்சாத்திட்டுள்ளது. திணைக்களத்துடன் நேரடியாக இணைப்பை ஏற்படுத்தி வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இந்த உடன்படிக்கை உதவியாக அமைந்திருக்கும்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் பயனாக, வாடிக்கையாளரின் அனுமதியுடன் திணைக்களத்தின் தரவு திரட்டை அணுகி, கணக்கு ஆரம்பிக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்திக் கொள்ள வங்கிக்கு ஏதுவாக இருக்கும். இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு ஒன்லைன் ஊடாக சௌகரியமான முறையில், வங்கிக்கு நேரடியாக விஜயம் செய்யாமல் தமது கணக்கு ஆரம்பித்தலை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

 

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு ஆட் பதிவுத் திணைக்கள வளாகத்தில் இடம்பெற்றது. இதில் இரு தரப்பின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஆட் பதிவாளர் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி. வியானி குணதிலக, அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர்,  வங்கிச் செயற்பாடுகளுக்கான உப தலைவர் இம்தியாஸ் இக்பால், பிரதம தகவல் அதிகாரி ரஜித திசாநாயக்க, சட்டப் பிரிவின் தலைமை அதிகாரி சுலானி தயாரட்ன மற்றும் டிஜிட்டல் வங்கியியல் பிரிவின் தலைமை அதிகாரி சஞ்ஜீவ பொன்சேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இந்த கைச்சாத்திடல் தொடர்பில் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “டிஜிட்டல் வங்கியியல் சேவைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் காலப்பகுதியில், பணச் சலவை மோசடி (money laundering) மற்றும் அடையாளத் திருட்டு போன்றனவும் அதிகரித்துள்ளன. இதனை உறுதி செய்வதற்கு KYC due diligence செயன்முறை மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.

ஆட்பதிவாளர் திணைக்களத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதனூடாக, மிகவும் சுலபமாக ஒரு க்ளிக் செய்வதன் மூலம், வாடிக்கையாளர் தகவல்களை எம்மால் உறுதி செய்து கொள்ள முடியும். எமது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்த சேவை காணப்படுவது பற்றி அறிந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.

 

ஆட்பதிவாளர் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி. வியானி குணதிலக கருத்துத் தெரிவிக்கையில், “எமது தரவுகளை அணுகி, அதனூடாக வாடிக்கையாளர் தரவுகளை சௌகரியமான முறையில் உறுதி செய்வதற்காக அமானா வங்கியை எமது கட்டமைப்பில் இணைத்துள்ளமையையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

இதனூடாக வங்கியின் eKYC செயன்முறையை முன்னெடுக்க வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளது. இந்த கட்டமைப்பினூடாக, வாடிக்கையாளர்களுக்கு தமது வீடுகள் அல்லது அலுவலகங்களில் சௌகரியமாக இருந்தவாறு வங்கிக் கணக்குகளை டிஜிட்டல் முறையில் ஆரம்பித்துக் கொள்வதற்கு பெருமளவு அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும் என நாம் நம்புகின்றோம்.” என்றார்.

 

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது.

IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2020 ஒக்டோபர் ஃபிட்ச் ரேட்டிஸ் ஸ்ரீ லங்காவினால் வங்கியின் தேசிய நீண்ட கால தரப்படுத்தலான BB+(lka) உறுதியான நிலை என்பதை வழங்கியிருந்தது.

அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.

Hot Topics

Related Articles