உலகம்

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் அமானா வங்கியின் வரிக்கு முந்திய இலாபம் 20% இனால் உயர்வு. சிறந்த முற்பண வளர்ச்சியும் பதிவு

2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், பொருளாதார சவால்கள் காணப்பட்ட போதிலும் உறுதியான மீட்சியை அமானா வங்கி பதிவு செய்திருந்தது.

தொற்றுப் பரவலுக்கு முன்னரான, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வரிக்கு முந்திய இலாபமாக 20% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. அத்துடன், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வரிக்கு முந்திய இலாபமாக 217.1 மில்லியன் ரூபாயை பதிவு செய்திருந்தது.

இந்தப் பெறுமதி கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 180.0 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. இந்தக் காலாண்டில் வாடிக்கையாளர் முற்பணங்களின் வளர்ச்சி 10% இனால் அல்லது 6.1 பில்லியன்கள் அதிகரித்ததுடன், இது வங்கியின் வரலாற்றில் மிகப்பெரிய காலாண்டு வளர்ச்சியாகக் காணப்பட்டது.

 

வங்கியின் ஆரோக்கியமான நிதியியல் எல்லைப் பெறுமதியான 3.7% இன் பங்களிப்புடன் முற்பணங்கள் பிரிவு சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. வங்கியின் தேறிய நிதியியல் வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10% இனால் அதிகரித்து 892.0 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.

மதிப்பிறக்கத்தின் பின்னர் தேறிய தொழிற்படு வருமானம் 934.2 மில்லியன் ரூபாயாக காணப்பட்டது. செலவுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வங்கியின் முயற்சிகளின் பெறுபேறாக, 2020 காலாண்டுடன் ஒப்பிடுகையில் தொழிற்படு செலவீனங்களில் 7% வீழ்ச்சி பதிவாகியிருந்தது.

நிதிச் சேவைகளில் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிக்கு முன்னரான தொழிற்படு இலாபம் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 18% வளர்ச்சியை எய்தி, 308.8 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.

முதல் காலாண்டுக்கான வங்கியின் திரண்ட வரிப் பங்களிப்பு 178.1 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. இது வங்கியின் வரிக்கு முந்திய தொழிற்படு இலாபத்தின் 58% ஆக காணப்பட்டது. இக்காலப்பகுதிக்கான வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 130.6 மில்லியனாக காணப்பட்டது.

 

வங்கியின் வாடிக்கையாளர் வைப்புகள் ரூ. 4.2 பில்லியன் அல்லது 5% இனால் அதிகரித்து ரூ. 87.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. வாடிக்கையாளர் வைப்புகளில் வளர்ச்சி பதிவாகியிருந்ததுடன், ஆரோக்கியமான CASA விகிதமாக 45.7% பதிவாகியிருந்தது.

வங்கியின் வாடிக்கையாளர் முற்பணங்கள் 2020 ஆம் ஆண்டின் நிறைவுப் பெறுமதியான ரூ. 62.6 பில்லியன் என்பதுடன் ஒப்பிடுகையில் மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலாண்டில் ரூ. 68.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்த சொத்துக்கள் பெறுமதி ரூ. 100 பில்லியன் எனும் மைல்கல்லைக் கடந்திருந்ததுடன், இது வங்கியின் மொத்த சொத்துக்கள் 2021 மார்ச் 31 ஆம் திகதியன்று 6% இனால் அதிகரித்து 106.5 பில்லியனாக பதிவாகியிருந்தது.

சவால்கள் நிறைந்த சந்தைச் சூழலில் முற்பணப் பெறுமதியில் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த போதிலும், தூரநோக்குடனான நிதிப்பட்டியல் முகாமைத்துவம் மற்றும் உரிய காலத்தில் வாடிக்கையாளர் ஈடுபாடு போன்றவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தியிருந்தது.

இதனூடாக, 2020 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட NPA பெறுமதியை விட சிறந்த பெறுமதியைப்  பதிவு செய்திருந்தது. இதன் அடிப்படையில் தேறிய தொழிற்படா முற்பணங்கள் (NPA) பெறுமதி 1.4% இலிருந்து 0.7% ஆக குறைந்திருந்ததுடன், மொத்த தொழிற்படா முற்பணங்கள் (NPA) பெறுமதி 4.0% இலிருந்து 3.3% ஆக குறைந்திருந்தது.

வங்கியின் முதல் மூன்று மாத காலப் பகுதிக்கான நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “2021 முதல் காலாண்டில் அமானா வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

கடந்த ஆண்டில் நிலவிய பாரிய சவால்களுக்கு மத்தியில் இவ்வாறான உயர்ந்த பெறுபேறுகளை எய்துவதற்கு காரணமாக அமைந்த எமது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

இந்த காலாண்டில் எமது முற்பணங்கள் பிரிவில் பதிவாகியிருந்த வளர்ச்சி, எமது மக்களுக்கு நட்பான நிதியியல் தீர்வுகளில் அதிகளவு ஈடுபாடு மற்றும் ஏற்றுக் கொள்ளல் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாம் பதிவு செய்துள்ள இந்த சிறந்த ஆரம்பம், ஆண்டின் ஏனைய காலப்பகுதியிலும் உறுதியான பெறுபேறுகளை எய்துவதற்கு ஏதுவாக அமைந்திருக்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைத் துறையில் காணப்படும் வளர்ந்து வரும் வாய்ப்புகள் எமக்கு சாதகமானதாக அமைந்திருக்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், வங்கியின் பிரதான தந்திரோபாய பகுதியாகவும் இது அமைந்திருக்கும். இதனூடாக, பொருளாதாரத்தின் மீட்சிக்கும் வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

சிறந்த பெறுபேறுகளை பாராட்டும் வகையில், அமானா வங்கிக்கு, ஐக்கிய இராஜ்ஜியத்தை தளமாகக் கொண்ட குளோபல் பாங்கிங் அன்ட் ஃபினான்ஸ் ரிவியு மூன்று பெருமைக்குரிய விருதுகளை வழங்கி கௌரவித்திருந்தது.

இலங்கையின் சிறந்த செயலாற்றும் வங்கிகள் வரிசையில் அமானா வங்கி தனது ஸ்தானத்தை உறுதி செய்யும் வகையில், “இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் வணிக வங்கி” எனும் விருதையும் பெற்றுக் கொண்டது.

வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் பணியாற்றும் இலங்கையர்களின் நிதியியல் தேவைகளுக்கு சேவையாற்றும் வகையில் விசேடமாக முன்னெடுக்கும் Expat Gold இன்  ஊடாக அமானா வங்கிக்கு “இலங்கையின் சிறந்த வெளிநாட்டு வதிவோர் வங்கிச் சேவைகள்” விருது வழங்கப்பட்டிருந்தது.

வங்கியின் சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமான OrphanCare ஐ பாராட்டியும், அதனூடாக 3000க்கும் அதிகமான அநாதரவான சிறுவர்களுக்கு அனுகூலம் வழங்கப்பட்டிருந்தமை கௌரவித்தும், குளோபல் பாங்கிங் அன்ட் ஃபினான்ஸ் ரிவியுவினால் “இலங்கையின் சிறந்த சமூகப் பொறுப்புணர்வு வங்கி” எனும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கியாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது.

ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது.

2020 ஒக்டோபர் ஃபிட்ச் ரேட்டிஸ் ஸ்ரீ லங்காவினால் வங்கியின் தேசிய நீண்ட கால தரப்படுத்தலான BB+(lka) உறுதியான நிலை என்பதை வழங்கியிருந்தது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.

 

 

 

 

 

Hot Topics

Related Articles