தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 37 வயது கோஷியாமி தமாரா சித்தோல் என்ற பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இது குறித்து உத்தியோகபூர்வ தரவுகள் வெளியிடப்படவில்லை, குழந்தை பிறந்த வைத்தியசாலையோ குழந்தைகளின் புகைப்படமோ பகிரப்படவில்லை.
இந்த பெண்ணுக்கு ஏற்கனவே 6 வயதுடைய இரட்டை குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்திருந்தார்.
7 மாத கர்ப்பத்தின் பின்னர் 7ஆம் திகதி பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து பிரிட்டோரியா நகரி்ல் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரம்பத்தில் வைத்திய பரிசோதனைகளின் போது 8 குழந்தைகள் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை அவருக்கு சிசேரியன் மூலம் 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என 10 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து குழந்தைகளின் பெற்றோர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது தாயும், 10 குழந்தைகளும் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் பிராந்திய ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் தபோ மசெப், தனது மாகாணத்தில் எந்தவொரு மருத்துவமனையிலும் – 10 குழந்தைகளை பிரசவித்ததாக எந்த பதிவும் இல்லை என்றும், இதுபோன்ற நிகழ்வு ‘மறைக்க கடினமாக’ இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
பிறப்பு உண்மையானது என்று உறுதிப்படுத்தப்பட்டால், அது ஒரு உலக சாதனையாக இருக்கும் – மொலிக்கோவில் ஒன்பது குழந்தைகளைப் பெற்ற ஹலிமா சிஸ்ஸே என்ற மாலி நாட்டு பெண்ணின் சாதனை முறியடிக்கப்படும்