உலகம்

மூழ்கிய கப்பலால் கவிழ்ந்துபோன மீனவர் வாழ்க்கை – ஒரு நேரடி ரிப்போர்ட் ஒரு நேரடி ரிப்போர்ட்

– வீ. பிரியதர்சன்

“ கப்பலுடன் சேர்ந்து எமது வாழ்வாதாரமும் தீக்கிரையாகிவிட்டது.  தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்கிய கப்பலைப்  பார்க்கவே எல்லோரும் இங்கு வருகிறார்கள் .

ஆனால் மூழ்கிய கப்பலாலும், கொரோனாவாலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எங்களை பார்க்க இன்று வரை எவரும் வரவில்லை’“ என பெரும் ஏமாற்றத்துடன் கூறுகிறார் 49 வயதுடைய 5 பிள்ளைகளின்  தாயாரான திருமதி அன்டனி சுஜிவா.


மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்ற நிலைமைதான், இன்று நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்து எரிந்த நிலையில் கடலில்  மூழ்கியதால் அதிலிருந்து கடலில் கலந்த இரசாயன பதார்த்தங்கள் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கடலில் கலந்தன.

இதனால்  களுத்துறை முதல்  நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான  மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டு அவர்களின் குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றன.

கொரோனா பெருந்தொற்று பரவலின் மத்தியிலும் ஏழை மீனவர்களின் வயிற்றில் அடித்துள்ள பேர்ள் கப்பல் அனர்த்தம் ஒரு புறமிருக்க இயற்கையின் சீற்றமும் இவர்களை விட்டு வைக்கவில்லை.


நிம்மதியாக உறங்கக்கூட இடமில்லாது வீதியோரங்களில் வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு நெருக்கடி நிலைமை கம்பஹா மாவட்டத்தின் வத்தளை டிக்கோவிட்ட எலகந்த கரையோர பிரதேசத்தில் வாழும் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

என்ன செய்வதென்று அறியாமல் நிலைகுலைந்து போய் நிற்கின்றனர் இப்பகுதி மீனவர்கள்.

“ தேர்தல் காலத்தில் மட்டும் அனைத்து அரசியல்வாதிகளும் வருவார்கள். எங்களுக்கென்று ஒரு உதவி தேவைப்படும் பொழுது யாருமே இங்கு இல்லை. அவர்களுக்காக வாக்களித்த எமக்கு ஒன்றுமே இல்லை” என்கிறார் சுஜிவா.


“ தற்பொழுது நீங்கள் செய்தி எடுக்க இங்கு வந்துள்ளீர்கள். அதேபோல இன்னொரு ஊடகத்தினரும் செய்தி எடுக்க வந்தார்கள். ஆனால் எந்த ஒரு அரசியல்வாதிகளும் எங்களை பார்க்க வரவில்லை.

இந்த பகுதிக்கு மழை பெய்தால் கண்டிப்பாக வெள்ளம் வரும். யாரோ ஒரு  சிலர் தரும் பொருட்களை வைத்து தான் நாம் உணவு உண்கின்றோம் என வயிற்றுப்பிழைப்பிற்கு ஏங்கியவாறு கூறுகிறார் அன்டனி சுஜிவா.

பேர்ள் கப்பல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் நஷ்ட ஈடு வழங்கப்படுமென அரசாங்கம் தெரிவிக்கின்ற போது அவர்கள் பாதிக்கப்பட்ட தருணத்தில் குறித்த நஷ்ட ஈடு கிடைக்குமா என்பது அவர்களின் ஏக்கமாகின்றது.

“ இதற்கு முதல் எல்லாம் வெள்ளம் வந்து போன பிறகு தான் நிவாரணம் கிடைத்தது. ஏதோ இந்த முறை தான் வெள்ளத்தின் போதே கிடைத்துள்ளது. நாங்கள் கடன் வாங்கித் தான் எங்களுக்காகவும் எங்களது  பிள்ளைகளுக்காகவும் இந்த வீட்டைக் கட்டி உள்ளோம்.

இருப்பினும் இப்படி வெள்ளம் வந்ததால்  பிள்ளைகள் வேலைக்கு போக முடியாமல் இருக்கிறார்கள். எனது மகன் இந்த வெள்ளத்திலும் வேலைக்கு போகின்றான். ஏனென்றால் வேலைக்கு போனால் தான் சம்பளம் என்பதால் அவன் வேலைக்கு போகின்றான்.”

என்று கூறும் சுஜிவாவின் கண்களில் பெரும் ஏமாற்றமும் எதிர்பார்ப்புகளும் தெரிகின்றன.

இவ்வாறு நாட்டின் காலநிலையாலும் பேர்ள் கப்பல் அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள பல குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றன. இவர்களின் கேள்விகளுக்கு பதில் எப்போது தான் கிடைக்கப்போகின்றதோ? கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் ஒருபுறமிருக்க இயற்கையின் சீற்றமும் அன்றாடம் உழைத்து உண்ணும் ஏழை மக்களையும் விட்டு வைக்கவில்லை.

“ எங்களிடம் பணம் இல்லை. உண்ண உணவும் இல்லை. தற்பொழுது வெள்ளம் வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கடலுக்கும் போக முடியவில்லை எங்களை விரட்டுகிறார்கள் ” என பேர்ள் கப்பல் அனர்த்தத்தினால் கடலுக்கு மீன்பித் தொழிலுக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற முடியாது தவிக்கும் 5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய அன்டனி கண்களில் நீர் ததும்ப கூறுகிறார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கு திரும்பினாலும் எழும்ப முடியாத நிலையில் உள்ளனர். மீன்பிடித் தொழிலை எப்போது மீண்டும் ஆரம்பித்து இன்னல்களுக்கு உள்ளாகியுள்ள தமது குடும்பத்தின் நிலையை தூக்கி நிறுத்துவது என்ற எண்ணத்துடன் அவர்கள் கடலுக்குச் சென்று தொழிலுக்கு செல்ல முடியாதா என்று கடலைப் பார்த்து பெருமூச்சு விடுகின்றனர்.

“ எனது கணவர் கடல் தொழில் செய்பவர். இந்த கொரோனா காரணமாகவும் கப்பல் கடலுக்குள் கவிழ்ந்ததாலும் கடலுக்கு போக முடியாத நிலையில் உள்ளார்.  அப்படி என்றால் நாங்கள் எப்படி வாழ்வது……? கிராம சேவகர் எங்களுக்கு பொருட்கள் தந்தார் அதை வைத்து பகலும் இரவும் உண்கின்றோம். அரிசி 5 கிலோ மற்றும் பருப்பு இவை தான் கிடைக்கின்றன. இன்று எங்களது பகுதியில் அனைவருக்கும் ஒன்றாக சமைத்து உணவுகளை பரிமாறி உண்கின்றோம்” என விரக்தியுடன் கூறும் சுஜிவா,

“ இந்த கொரோனா காரணமாக எனது 2 ஆவது மகனின் வேலையும் இல்லாமல் போயுள்ளது. எங்களது குடும்பத்தில் 7 பேர் இருக்கின்றோம் எவ்வாறு 5000 ரூபா எங்களுக்கு போதுமானதாக அமையும். எனது  மகளின் மருத்துவ செலவுக்கு மாத்திரம் 8000 ரூபா செலவாகிறது. இந்த  வெள்ளத்தினால் படுக்கைகளை மேலே உயர்த்தி வைத்து பெரும் கஷ்டத்தின் மத்தியில் இரவு தூங்குகிறோம்.

ஒவ்வொரு வருடமும் இந்த பிரச்சினை எமக்கு உள்ளது. எவரும் இங்கு வந்து எமது கஷ்டத்தை பார்ப்பதில்லை. ஆனால் தேர்தலுக்கு மட்டும் அனைவரும் வருவார்கள். எங்களை பற்றி கொஞ்சம் கூட யாருமே யோசிக்கிறது இல்லை” என்கிறார்.

கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் உலகளவில் காணப்பட்டாலும் அதனை மக்கள் கடந்து செல்லக்கூடிய நிலை உருவாகினாலும் சீரற்ற காலநிலையின் பாதிப்பும் ஓரிரு நாட்களில் தணிந்தாலும் இந்த பேர்ள் கப்பலின் அனர்த்தத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு பல பருடங்களுக்கு நீடிக்குமென சமுத்திரவியல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் என பலர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதைவிட  கப்பல் அனர்த்தத்தையடுத்து அதிலிருந்த இரசாயனங்கள் மற்றும் பிளஸ்டிக் உற்பத்திக்கு பயன்படும் மூலப்பொருள் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தாலாக அமைந்துள்ளதாகவும் அவற்றை உணவாக உட்கொள்ளும் மீன்களை மனிதர்களை உண்ணும் போது புற்றுநோய் போன்ற நோய்கள் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு வரக்கூடுமென வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“ வழமையான நாட்களில் கடலுக்கு சென்றால் தான் எங்களுக்கு பணம். தற்பொழுது கடலுக்கும் செல்ல முடியாமல் வீட்டிலும் இருக்க முடியாமல் இருக்கிறோம். எனது குடும்பத்தில் 7 பேர் இருக்கின்றனர்.

அரசியல்வாதிகள் எவரும் எங்களை பார்க்க வரவில்லை. எங்களுக்கு ஏதேனும் ஒரு நிவாரணம் வேண்டும். நான் 10 வயதில்  இருந்து இன்று வரை வேறு எந்த தொழிலுக்கும் போனதில்லை. நான் கடலுக்கு மட்டுமே போகின்றேன் என பெருமூச்சு விட்டவராக கையை விரித்தபடி ஏக்கத்துடன் கூறுகிறார் அன்டனி.

இவ்வாறு நீண்ட நாட்களுக்கு களுத்துறை முதல் நீர்கொழும்பின் கொச்சிக்கடை வரை மீன்பிடிக்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் மாத்திரம் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தொழிலில் ஈடுபட்ட முடியாத நிலையில், தமது குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக பரிதவித்து வருகின்றனர்.


இவ்வாறு தொழில் தடை நீடிக்கும் பட்சத்தில் நாட்டின் மீன்பித்துறைக்கும் மீன்பிடித்துறையுடன் இணைந்த ஏனைய சிறுசிறு கைத்தொழில்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன். நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு நாட்டு மக்கள் பலர் வறுமை நிலைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்படும்.

சமூகத்தில் இவ்வாறானவர்களின் அன்றாடவாழ்க்கை மட்டுமல்லாது அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கையும் இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

பொருளாதாரம், வாழ்வாதாரம் போன்றவற்றில் பல இன்னல்களை எதிர்கொள்ளும் மக்களின் நிலைமைகளை நேரில் சென்று அறிந்து இதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் விரைந்து நடடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது போனால் நாட்டில் வறுமை தாண்டவமாடுவதுடன் பல்வேறு குற்றச்செயல்களும் அதிகரிக்கும் நிலை தோன்றும் !.

Hot Topics

Related Articles