உலகம்

இலங்கையில் சீரற்ற வானிலையால் 170,022 பேர் பாதிப்பு – மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!

இலங்கையில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் 7 பேர் காணமால் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு நாட்டின் 7 மாவட்டங்களில் 41,717 குடும்பங்களைச் சேர்ந்த 170,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 569 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இன்று காலை மாவனெல்ல – தெவனகல பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை மற்றும் அவர்களது 23 வயதான மகள், 29 வயதான மகன் ஆகிய நால்வரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

 

வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்

மாஓயா நீரேந்தும் பகுதிகளில் அதிக மழை காரணமாக அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னால, வென்னப்புவ, நீர் கொழும்பு, கட்டான, தங்கொட்டுவ ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

எனவே பொது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் வருமாறு:-

கொழும்பு மாவட்டம் – சீதாவக்க பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்

காலி மாவட்டம் – நெலுவ பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்

களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட, ஹொரணை, இங்கிரிய, பாலிந்தநுவர, புளத்சிங்ஹல, அகலவத்த மற்றும் மத்துகம பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள்

கண்டி மாவட்டம் – தும்பனே, உடுநுவர, யட்டிநுவர பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள்

கேகாலை மாவட்டம் – கலிகமுவ, மாவனெல்ல, கேகாலை, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல, தெரணியகல, புளத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, ரம்புக்கன, அரணாயக்க மற்றும் வரக்காபொல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள்

மாத்தளை மாவட்டம் – அம்பன்கங்க கோரளே, பல்லேபொல மற்றும் யட்டவத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்
மாத்தறை மாவட்டம் – பிட்டபெத்தர பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்

நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்

இரத்தினபுரி மாவட்டம் – குருவிட்ட, கிரியெல்ல, நிவித்திகல, இரத்தினபுரி மற்றும் எலபாத்த, அயகம, கலவான மற்றும் எஹெலியகொட பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள்

மழை தொடர்பான எதிர்வுகூறல்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Hot Topics

Related Articles