உலகம்

டயானா மரணத்துக்கு நச்சுத்தன்மை வாய்ந்த ஊடகக் கலாச்சாரமே காரணம் – ஹாரி பகிரங்க குற்றச்சாட்டு!

-பத்திரிகையாளர் மார்ட்டின் பஷீர் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியிடம், மன்னிப்பு கோரியுள்ளார்

டயானாவின் இரண்டாவது மகனான ஹாரி, தனது தாயின் மரணத்திற்கு இந்த நச்சுத்தன்மை வாய்ந்த ஊடகக் கலாச்சாரமே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

1997 ஆம் ஆண்டு 31 ஆகஸ்ட், உலகத்தையே சோகத்தில் ஆழத்திய நாள் என்று கூறலாம். பிரிட்டன் அரச குடும்பத்தின் மருமகளாக இருந்தபோதிலும் அனைவரிடத்திலும் இயல்பாக பழகும் டயானாவின் பண்பு உலகும் முழுவதும் அவரை நேசிக்க செய்தது.

பிரிட்டன் இளவரசர் சார்லஸின் முதல் மனைவி இளவரசி டயானா. இவர்களுக்கு வில்லியம், ஹாரி என இரு மகன்கள் உள்ளனர். இவரின் மரணம் தொடர்பில் பல சர்ச்சைக்குறிய கருத்துக்கள் வெளியாகிவருகின்றன.

அதேவேளையில், துணிச்சலான பேட்டிகள் மூலம் சர்ச்சைக்குரிய நபராகவும் அவர் அறியப்பட்டார். கடந்த 1995ம் ஆண்டு பிபிசி ஊடகவியலாளரான மார்ட்டின் பஷீர் டயானாவை பேட்டி கண்டார். அரசு குடும்பத்தின் உள்விவகாரங்கள் ரகசியமாக இருக்கும் என கூறப்படும் நிலையில், இந்த பேட்டியின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து டயானா பேசினார்.

தற்போது இந்த பேட்டியின் போது பிபிசி ஊடகம் முறைகேட்டில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தனது திருமணத்தை தாண்டிய தொடர்பு, இளவரசர் சார்லஸ் மற்றும் கமிலா இடையே இருந்த உறவு என அரண்மனை ரகசியங்கள் பலவற்றை வெளிப்படையாக கூறினார். இந்த பேட்டி ஒளிபரப்பாக உலகம் முழுவது பரபரப்பை ஏற்படுத்தியது. டயானாவின் இந்த பேட்டி எலிசபெத் ராணியை கோபமடைய செய்தது.

இந்நிலையில், டயானாவின் பேட்டி தொடர்பாக பிபிசி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி லார்ட் டைசன் விசாரணை நடத்தினர். அண்மையில் அவர் தனது அறிக்கையை வெளியிட்டார்.

அதில், மார்ட்டின் பஷீர் நம்பமுடியாதவர் மற்றும் நேர்மையற்றவர் என்றும் இந்த பேட்டி தொடர்பாக பதிலளிக்கும்போது பிபிசி தனது உயர்ந்த தரத்தை இழந்துவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பேட்டிக்காக மார்ட்டின் பஷீர் போலி ஆவணங்களை பயன்படுத்தியதாகவும் , பஷீரின் வஞ்சனைகள் குறித்து தெரிந்தும் பிபிசி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதனை முடி மறைக்க முயன்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது போலி வங்கி அறிக்கைகள், போலி ஆவணங்களை பயன்படுத்தி, தான் கண்காணிப்பில் உள்ளதை போன்ற எண்ணத்தை டயானாவுக்கு ஏற்படுத்தியுள்ளார். அதன் மூலம் டயானாவின் சகோதரரின் நம்பிக்கையைபெற்று அதன் மூலம் டயானாவை பேட்டி கண்டார்.

இந்த விவகாரங்கள் பிபிசிக்கு தெரிந்தபோதிலும் பேட்டி மீதான எதிர்பார்ப்பு காரணமாக அவற்றை மூடி மறைத்துள்ளது. இந்த விவகாரங்கள் தற்போது வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை அறிக்கை வெளியானதை தொடர்ந்து பிபிசி மன்னிப்பு கோரியுள்ளது.

இந்த பேட்டிக்கு பிறகு ஊடகங்கள் என்றாலேயே விலகி இருக்க தொடங்கினார் டயானா. இதற்கிடையே, கடந்த 1997 ஆம் ஆண்டு 31ம் தேதி பத்திரிகையாளர்களுக்கு அஞ்சி காரில் வேகமாக சென்றபோது டயானா விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், விசாரணை அறிக்கை தொடர்பாக பேட்டியளித்துள்ள இளவரசர் வில்லியம், பிபிசி செய்த வஞ்சனையால் தனது பெற்றோர் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மார்ட்டின் பஷீர் மட்டுமல்லாது பிபிசியின் உயர் அதிகாரிகளாலும் தனது தாய் ஏமாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த பேட்டிக்கு பின் டயானா மன உளைச்சலுடன் காணப்பட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே டயானாவின் இரண்டாவது மகனான ஹாரி, தனது தாயின் மரணத்திற்கு இந்த நச்சுத்தன்மை வாய்ந்த ஊடகக் கலாச்சாரமே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து இளவரசி டயானாவின் மரணத்துக்குக் காரணமென குற்றம்சாட்டப்பட்ட பத்திரிகையாளர் மார்ட்டின் பஷீர், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியிடம், மன்னிப்பு கேட்டார்.

டயானாவை பேட்டி எடுத்த பத்திரிகையாளர் பஷீர் கூறியதாவது:

டயானாவுக்கு தீங்கு விளைவிக்க நான் அப்போது எண்ணவில்லை. இப்போது அதை செய்தோம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.டயானாவின் மரணத்துக்கு என் நடவடிக்கைகள் தான் காரணம் என கூறுவது நியாயமற்றது. அதற்கு நான் மட்டுமே பொறுப்பு என குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது.எனினும், டயானாவின் மகன்கள், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரியிடம், மன்னிப்பு கேட்கிறேன், என்றார்.

Hot Topics

Related Articles