வாரத்திற்கு 55 மணிநேரத்திற்கு அதிகமாக வேலை செய்பவரா நீங்கள்? – உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை!

வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக வேலை செய்வது கடுமையான சுகாதார ஆபத்து என உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் கூறினார்.

நீண்ட நேரம் வேலை செய்வதால் ஊழியர்களுக்கு ஏற்படும் உடல்நிலை பாதிப்பு, மரணங்கள் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் ஆய்வு மேற்கொண்டது.
2000-2016 காலகட்டத்தில் உள்ள தரவுகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், நீண்ட நேரம் வேலை பார்த்த ஊழியர்களில் பக்கவாதம் மற்றும் இதய நோய் போன்ற நோய்களில் உயிரிழப்பு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முதல் முறையாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவு சர்வதேச சுற்றுச்சூழல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் நீண்ட வேலை நேரத்துடன் தொடர்புடைய பக்கவாதம் மற்றும் இதய நோயால் 745,000 பேர் இறந்திருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
இது 2000-ல் ஏற்பட்ட உயிரிழப்பை விட 30 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக வேலை செய்வது கடுமையான சுகாதார ஆபத்து என உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் சுகாதாரத் துறையின் இயக்குநர் மரிய நீரா கூறினார்.

அதிக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும், தொழிலாளர்களின் பாதுகாப்பை மேலும் ஊக்குவிப்பதே தங்களின் முக்கிய பணி என்றும் அவர் தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் அதிகம் பேர் (72%) ஆண்கள் மற்றும் நடுத்தர வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்பது ஆய்வு முடிவு காட்டுகிறது.

வேலையில் இருந்த காலங்களில் ஏற்பட்ட மரணங்களைவிட, வாழ்க்கையின் பிற்பகுதியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மரணங்களே அதிகம்.

தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வரையறுக்கப்பட்ட பகுதியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த ஆய்வு முடிவு காட்டுகிறது.

194 நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட தரவுகளின்படி, ஒரு வாரத்தில் 55 மணிநேரம் அல்லது அதற்கு அதிகமான நேரம் வேலை செய்வது 35 சதவீதம் பக்கவாதம் ஏற்படவும், 35 மணி முதல் 40 மணி நேரம் வேலை பார்ப்பது 17 சதவீதம் உயிரிழப்பை ஏற்படுத்தும் இதய நோய் ஏற்படவும் காரணமாக அமைந்துள்ளது.

– மாலைமலர்

Hot Topics

Related Articles