கொழும்பிலுள்ள உலக சுகாதார ஸ்தாபன அலுவலகம் மற்றும் இலங்கையிலுள்ள மருத்துவத்துறை நிபுணர்கள் முன்னெடுத்த கலந்துரையாடலின் அறிக்கைக்கு அமைய எதிர்வரும் சில வாரங்களில் கொவிட் வைரஸ் இலங்கையில் மிக வேகமாக பரவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்துவதற்கு நாட்டை முடக்க வேண்டும் என்று சுகாதார தரப்புக்கள் பரிந்துரைத்தால் அதனை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டால் அதனை மீள கட்டியெழுப்ப முடியாது . ஆனால் மக்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதனை ஈடுசெய்ய முடியும். எனவே கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவற்கு நாட்டை முடக்குவதைத் தவிர மாற்று தீர்வு இருப்பதாக தோன்றவில்லையெவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
கொவிட் தொற்று இலங்கையிலும் , இந்தியா மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
இதேபோன்று இந்தியாவில் கறுப்பு பங்கசு (Black Fungus) என்ற பிரிதொரு நோயும் பரவ ஆரம்பித்துள்ளது. நாம் இதிலிருந்தும் பாதுகாப்படைய வேண்டும்.
எனவே மக்களின் உயிரை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம்.
பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புக்களை எம்மால் மீள சீரமைத்துக் கொள்ள முடியும்.
ஆனால் உயிருக்கு ஏற்படும் பாதிப்புக்களை எம்மால் ஒரு போதும் ஈடு செய்ய முடியாது. உயிரை பாதுகாப்பதே அரசாங்கத்தின் கடமையாகும். இதன் அடிப்படையில் நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
நேற்று வெள்ளிக்கிழமை காணொளியூடாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்தார்.