இலங்கையில், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடைபவணி போராட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல் உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்தும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பாக நீதியை வழங்குமாறும் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள பிரச்சனைக்கு தீர்வு காணுமாறும் கோரி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடைபவணி முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 3 ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஊடாக கடந்த 07 ஆம் திகதி மாலை பொலிகண்டியை அடைந்துள்ளது.
இதில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தோர் உட்பட பெருந்திரளாவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில், இந் நடைபவணி போராட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணியில் பங்குபற்றிய சிலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் மூன்று காவல்நிலையங்களினால் ‘பி’ அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
ஏலவே பேரணிக்கு தடைகோரி பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை காவல்துறையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த ‘பி’ அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன், யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி கே.சுகாஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்து வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதோடு அதனை எதிர்வரும் மார்ச் மாதம் 29, மே 19 மற்றும் 20 ஆம் திகதிகளுக்கு நீதிமன்றம் தவணையிட்டுள்ளது.
இதேவேளை, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியும் எனவும் வாகனங்களைப் பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைக்க முடியும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.